பள்ளி மேலாண்மை குழுக்கள் பரிந்துரை செய்ததில், அரசுப் பள்ளிகளுக்கான 28 ஆயிரம் வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளின் செயல்பாட்டை கண்காணிக்கவும், பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தயாரித்து பரிந்துரைக்கவும் அமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு (எஸ்எம்சி), கடந்த ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய 20 உறுப்பினர்கள் கொண்டகுழுவாக இது மாற்றி அமைக்கப்பட்டது. இந்த குழு மாதந்தோறும் கூடி விவாதித்து, பள்ளி வளர்ச்சிக்கான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
அதன்படி, கடந்த 14 மாதங்களில் 33,550 பள்ளிகளில் உள்ள எஸ்எம்சி குழுக்கள் 3 லட்சத்து 61 தேவைகள் இருப்பதாக செயலி வாயிலாக பதிவு செய்துள்ளன. அவற்றை துரிதமாக நிறைவேற்ற, பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்து தலைமைச் செயலர் தலைமையில் 14 பேர் கொண்ட மாநில கண்காணிப்பு குழுவை (எஸ்எல்எம்சி) தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழு பள்ளிகளின் தேவைகள் குறித்து 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லதுதேவைப்படும்போது கூடி ஆலோசித்து முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், எஸ்எம்சி குழு சமர்ப்பித்ததில், சுமார் 28ஆயிரம் தேவைகள் வரை நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக மாவட்டஅளவில் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முதல்கட்டமாக சுமார் 30 ஆயிரம் உடனடி தேவைகள் கண்டறியப்பட்டு பட்டியலிடப்பட்டன.
அதாவது, 5,564அரசுப் பள்ளிகளில் நீர், சுகாதாரம், மதிய உணவு வசதிகள், வளாக கட்டமைப்பு, கற்றல் கற்பித்தலுக்கான தளவாட பொருட்கள், பணியாளர்கள், உதவித் தொகை, நலத்திட்டங்கள் என சுமார் 30 ஆயிரம் தேவைகள் உடனே சரி செய்யப்பட வேண்டியதாக உள்ளன. அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுவரை 26,166 தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதில் மின்சாரம் மற்றும் கட்டிடங்கள் சார்ந்த உடனடி தேவைகள் அதிகமாகும். மேலும், 1,900 தேவைகளை நிறைவேற்ற பணிகள் நடந்து வருகின்றன. உடனடி தேவைகளை நிறைவேற்றிய பிறகு, அடுத்தகட்டமாக 50 ஆயிரம் கோரிக்கைகளை நிறைவேற்ற இலக்கு வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
Click here for latest Kalvi News