மத்திய அரசு ஓய்வூ தியதாரர்களுக்கான, பென்ஷன் இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக, மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.வங்கியாளர்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இரண்டு நாள் நடக்கிறது. இதை நேற்று துவக்கி வைத்து, மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது:
ஓய்வூதியதாரர்களுக்கான சேவைகளை சுலபமாக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆயுள் சான்று அளிக்கும் நடைமுறை, 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டது.
'மொபைல்போன் ஆப்' வாயிலாகவும் ஆயுள் சான்றை அளிக்கும் வசதி துவக்கப்பட்டது.
தற்போது, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் வாயிலாக சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவதில், ஓய்வூதியதாரர்களுக்கு உள்ள பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்கள் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் வழங்கும் ௧௮ வங்கிகளின் இணையதளங்கள் உட்பட, ஓய்வூதியம் தொடர்பான இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.இது ஓய்வூதியதாரர்களுக்கு சிரமம் இல்லாமல், தங்களுடைய சேவைகளை பெறுவதற்கு உதவும்.இவ்வாறு அவர் பேசினார்.