அதிகாரிகள் பல விளக்கங்கள் அளித்தாலும் கூட பல்வேறு விடைகாணப்படாத கேள்விகளும் எழுந்துகொண்டேதான் இருக்கின்றன.
அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான கால அவகாசம் மார்ச் 3ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளா் ஓய்வூதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்புக்குப் பிறகு, தங்களுக்கு ஒரு நியாயமான ஓய்வூதியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பலருக்கும் ஏற்பட்டாலும் கூட, அதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, அது தங்களுக்கு பொருந்துமா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
அதாவது, தொழிலாளா் ஓய்வூதிய சட்டத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, ஓய்வூதிய பங்களிப்புக்கான அதிகபட்ச ஊதியம் மாதம் ரூ.6,500-இல் இருந்து ரூ.15,000-ஆக அதிகரிக்கப்பட்டது.
மாதம் ரூ.15,000-க்கு மேல் ஊதியம் பெறுவோா் 1.16 சதவீதம் கூடுதல் ஓய்வூதியப் பங்களிப்பை வழங்க வேண்டும் என விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஓய்வூதியத் திட்டத்தில் இணையும் தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.15,000-ஆக இருக்க வேண்டுமெனவும் விதிகள் திருத்தப்பட்டன.
ஓய்வூதிய சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களுக்கு எதிராக கேரளம், ராஜஸ்தான், தில்லி மாநில உயா்நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உயா்நீதிமன்றங்கள், புதிய திருத்தங்களை ரத்து செய்து உத்தரவிட்டன. அந்த உத்தரவுகளுக்கு எதிராக மத்திய அரசும், தொழிலாளா் ஓய்வூதிய நிதி அமைப்பும் (இபிஎஃப்ஓ) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் அனைத்துத் தரப்பு வாதங்களையும் ஆராய்ந்து, தொழிலாளா் ஓய்வூதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
எனினும், ரூ.15,000-க்கு அதிகமாக மாத ஊதியம் பெறுவோா் மட்டுமே ஓய்வூதிய நிதியில் இணைய முடியும் என்ற விதியை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். புதிய திருத்தங்கள் தொடா்பாக நிலவிய பல்வேறு குழப்பங்கள் காரணமாக ஓய்வூதிய நிதியில் இணையாத தொழிலாளா்களுக்கு திட்டத்தில் இணைய 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
மேலும், மாதம் ரூ.15,000-க்கு அதிகமாக ஊதியம் பெறுவோா் கூடுதலாக 1.16 சதவீதம் ஓய்வூதியப் பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற திருத்தத்தையும் நீதிபதிகள் ரத்து செய்தனா். இபிஎஃப்ஓ அமைப்பு கூடுதல் நிதியைத் திரட்டும் நோக்கில், இந்த விதி ரத்தானது 6 மாதங்களுக்கு செல்லாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனா். 6 மாதங்களுக்குத் தொழிலாளா்களிடம் இருந்து கூடுதல் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
தற்போதைய நிலவரப்படி, இந்த சேமநல வைப்பு நிதியின் கீழ் யார் ஒருவரும் ரூ.3500க்கு மேல் ஓய்வூதியம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள், ஆன்லைன் விண்ணப்பித்தல் முறைக்கு மாற்றாக தங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கி பூர்த்தி செய்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்று பிரிவினர் அதிக ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கலாம். முதலில், ஒரு தொழிலாளர் இந்த திட்டத்தில் தற்போது இணைந்திருக்க வேண்டும். பணியில் இருந்து, அதிகபட்ச ஓய்வூதியம் திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். தற்போது இவர்கள் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து அதிக ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
இரண்டாவது, 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பின் ஓய்வு பெற்றவர்கள், தற்போது தொழில் நிறுவனத்துடன் இணைந்து இதில் பயன்பெறலாம்.
மூன்றாவது, 2014ஆம் ஆண்டுக்கு முன்பே ஓய்வு பெற்றிருந்தாலும், அப்போதே இந்த திட்டத்தில் இணைந்திருப்பவர்களும் கூட இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தில் இணைந்து, முன்கூட்டியே தங்களது பணத்தை எடுத்துவிட்டவர்கள் இதில் சேர முடியாது.
இரண்டாவது, இபிஎஃப்ஓ திட்டத்தில் 2014ம் ஆண்டு செப்டம்பர்மாதத்துக்குப் பிறகு இணைந்தவர்களாலும் இந்த அதிக ஓய்வூதியம் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.
ஒரு தொழிலாளரின் ஊதியம், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான அதிகபட்ச ஊதியத்தை விட அதிகமாக இருந்து, அது எங்கும் குறையாமல் இருந்திருக்க வேண்டும். இதில் தொழிலாளர் மற்றும் தொழில் நிறுவனம் இணைந்து விண்ணப்பிப்பது என்பது ஒரு விதியாக உள்ளது.
எனவே இது முற்றிலும் தொழில் நிறுவனத்தைச் சார்ந்ததாகவே உள்ளது. அதாவது, அதிக ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு அதிகபட்ச ஊதியத்தில் 12 சதவிகிதத் தொகையை செலுத்த முன் வர வேண்டும். ஆனால், இப்போதெல்லாம் பிஎஃப் தொகையை செலுத்துவதிலிருந்து தப்பிக்கவே நிறுவனங்கள் விரும்புகின்றன. அவ்வாறு இல்லையென்றாலும் அதிகபட்ச ஊதியம் ரூ.15000 என்ற அளவிலேயே நிறுத்தவும் விரும்புகின்றன. எனவே, இதிலிருக்கும் பல்வேறு சிக்கல்கள் காரணமாக, அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் தொழிலாளர்கள் அனைவராலும் இதில் இணைய முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளது.
இதுபோல, கணவர் இறந்துவிட்டால், மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்கும்பட்சத்தில், அவருக்கு இந்த திட்டத்தால் பயனடைய முடியுமா என்ற கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை என்றே களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
வருங்கால வைப்பு நிதி இணையதளத்தில் தொழிலாளர்கள் பதிவு செய்ய முன்வந்தாலும் கூட, அவர்கள் பணியாற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பும் விண்ணப்பிக்கும்போது தேவைப்படுகிறது. இதனை தொழிலாளர்களும் ஏற்கனவே ஓய்வூதியம் பெறுவோரும் எப்படி பெறுவார்கள் என்பதும் பதில் கிடைக்காத கேள்வியாகவே உள்ளது.