அரசுப் பள்ளிகளுக்கான என்எஸ்எஸ் நிதி, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணி திட்டத்துக்கு (என்எஸ்எஸ்) மத்திய அரசு சார்பில் நிதி வழங்கப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டு முதல்என்எஸ்எஸ் நிதியை பள்ளிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்துவதற்கு மத்தியஅரசு முடிவெடுத்துள்ளது. இதற் காக அரசுப் பள்ளிகள் பாரத் ஸ்டேட் வங்கியில் பிரத்யேக வங்கிக் கணக்கு ஒன்றை தொடங்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அதன்படி, என்எஸ்எஸ் திட்டம் அமலில் உள்ள அரசுப் பள்ளிகள், எஸ்பிஐ வங்கியில் புதிதாக பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும். அதன் விவரங்களை தொகுத்து இயக்குநரகத்துக்கு ஜன.20-ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், இதுசார்ந்து மறு உத்தரவு வரும் வரை என்எஸ்எஸ் வங்கிக் கணக்குகளை எந்தக்காரணம் கொண்டும் முடிக்கக் கூடாது என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளுக்கு என்எஸ்எஸ் நிதி தாமதமின்றி துரிதமாக சென்று சேரவும், தவறுகள் நடைபெறுவதை தவிர்க்கவும் இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Click here to join whatsapp group for daily kalvinews update