'பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர் நியமன தேர்வில், 'வெயிட்டேஜ்' எனப்படும் கூடுதல் மதிப்பெண் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டாம்' என, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த காலங்களில், ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்திய சில தேர்வுகளில் சர்ச்சைகள்ஏற்பட்டன. டி.ஆர்.பி.,யை சீரமைக்க அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், பள்ளிக்கல்வி துறை செயலர் காகர்லா உஷா அரசாணை பிறப்பித்துள்ளார்.
அதன் விபரம்:
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு அல்லது கணினி வழி தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்படும். ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மூத்த ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நியமிக்கப்படுவார்
மாவட்ட வருவாய் அதிகாரி, துணை கலெக்டர், இணை இயக்குனர், துணை இயக்குனர் அந்தஸ்து உட்பட, 71 புதிய பதவிகள் உருவாக்கப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் தலைவர், பள்ளிக் கல்வி இயக்குனர் அந்தஸ்தில் இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.
நிதித்துறை செயலர் அல்லது அவரது பிரதிநிதி, பள்ளிக்கல்வி கமிஷனர், தொழில்நுட்ப கல்வி இயக்குனர், கல்லுாரி கல்வி இயக்குனர் ஆகியோர், நிர்வாக குழுவில் இடம் பெறுவர்
போட்டி தேர்வுக்கு பின், சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு பதவிக்கு, 1.25 என்ற விகிதத்தில் தேர்வர்கள் அழைக்கப்படுவர்.
பள்ளிகள், கலை, அறிவியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் மட்டுமின்றி, இன்ஜினியரிங், சட்ட கல்லுாரிகள் மற்றும் அரசு பல்கலைகளுக்கான பேராசிரியர்களும், டி.ஆர்.பி., வழியாக தேர்வு செய்யப்படுவர்
'வெயிட்டேஜ்' ரத்து
நீதிமன்ற வழக்குகளை கையாள சட்ட மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும். வழக்குகளை விரைந்து முடிக்க, நிபுணத்துவம்பெற்ற வக்கீல்கள் குழுவின் ஆலோசனை பெறப்படும்
அனைத்து வகை போட்டி தேர்வுக்கான புத்தகங்களுடன், 'டிஜிட்டல்' நுாலகம் ஏற்படுத்தப்படும். அனைத்து பணி நியமன அமைப்புகளையும் இணைக்கும் மொபைல் செயலி உருவாக்கப்படும்
அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,யை போன்று, டி.ஆர்.பி.,யிலும் இனி வெயிட்டேஜ் முறை அமல்படுத்தப்படாது.
போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அவர்களின் உயர் கல்வி அல்லது வேறு தகுதிகள் அடிப்படையில், கூடுதல் மதிப்பெண் வழங்கப்படாது
டி.ஆர்.பி., அமைப்பு வெளிப்படையாகவும், அரசின் ரகசியங்களை பாதுகாத்தும் செயல்பட வேண்டியுள்ளதால், அதற்கென தனி கட்டடம் மற்றும்வளாகம் அமைக்கப்படும். இதை திட்டமிட கமிட்டி உருவாக்கப்படும்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Click here to join whatsapp group for daily kalvinews update