திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: செய்நன்றி அறிதல்
குறள் : 104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
பொருள்:
தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவார்.
பழமொழி :
Don't judge a book by its cover.
புறத்தோற்றம் கண்டு மயங்காதே
இரண்டொழுக்க பண்புகள் :
1.மின்னணு சாதனங்கள் விட மனிதர்கள் முக்கியம். எனவே உற்றாரோடு நல்ல உறவில் இருக்க முயல்வேன்.
2. அனைவரோடும் சிரித்தும் சிந்தித்தும் பேசுவேன்
பொன்மொழி :
ஒரு மனிதனுடைய குணத்தைப் பற்றி அறிவதற்கு அவனுடைய எண்ணங்களையும் செயல்களையும் ஆராய்ந்தால் போதுமானது
பொது அறிவு :
1. நண்டு தன் ஆயுட்காலத்தில் எத்தனை முறை சட்டையை உரிக்கிறது ?
18 முறை.
2. கண்ணால் பார்க்கக்கூடிய கிரகம் எது ?
செவ்வாய்.
English words & meanings :
hear - to listen, verb. கேட்டல். வினைச் சொல். here - at this place. adverb.இங்கே. வினையுரிச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
ஆளி விதைகள் மற்றும் பால் கலவையானது நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் ஆளி விதையை பாலில் கலந்து சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். இதனுடன், நீரிழிவு நோயால் ஏற்படும் பல சிக்கல்களைத் தடுக்க உதவும்.
NMMS Q
IUPAC ன் விரிவாக்கம்_______________
விடை: International Union Of Pure And Applied Chemistry
ஜனவரி 12 இன்று
தேசிய இளைஞர் நாள்
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12 ஆம் தியதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
நீதிக்கதை
ஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்
ஒரு நாள், ஏழை விவசாயி ஒருவர் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்றார். அது ஒரு கோடை காலம். வெயில் சுட்டெரித்து விவசாயிக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. வெயில் காரணமாக தண்ணீர் தாகமும் எடுத்தது. சோர்வடைந்த அவர், சாலை ஓரத்தில் இருந்த மரத்தடியில் நிழலில் ஒதுங்கினார்.
அப்போது அங்கு ஒரு இளைஞன் வந்தான். அவன் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவன். தான் சந்திக்கும் நபர்களிடம் தனது புத்திசாலித் தனத்தையும் சொல்லி பெருமை பேசிக் கொள்வான்.
மேலும் தனக்கு தெரியாதது எதுவும் இல்லை. அப்படி தெரிந்தால் அதை தனக்கு கூறுமாறு பிறரிடம் கேட்பான். அவனது இந்த ஆணவப்பெருக்கை அறிந்த பலரும் அவனைக் கண்டால் ஒதுங்கிச் செல்லத் தொடங்கினார்கள். இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட அந்த இளைஞன், தன்னைப்போல சிறந்த கல்வியாளர் யாரும் இல்லை என்ற அகந்தையுடன் இருந்தான்.
அந்த இளைஞன் மரநிழலில் ஒதுங்கி இருந்த விவசாயியை பார்த்தான். உடனே அவரிடம் பேச ஆரம்பித்தான். ஐயா விவசாயி நான் நிறைய படித்திருக்கிறேன். எனக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் எனக்கு தெரியாத எதுவும் உங்களுக்கு தெரிந்தால் அதை கூறுங்கள் பார்க்கலாம் என்று ஆணவத்துடன் பேசினான்.
அந்த இளைஞனின் ஆணவம் குறித்து அந்த விவசாயி ஏற்கனவே அறிந்திருந்தார். எனவே அவர் அமைதியாக இருந்தார். அது அந்த இளைஞனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவன் என்னதான் பேசினாலும் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் விவசாயி மௌனம் காத்தார்.
இந்த நிலையில் அந்த இளைஞன் தன்னிடம் இருந்த உணவுப்பொட்டலத்தை பிரித்தான். சாப்பாட்டைப் பார்த்ததும் விவசாயிக்கு பசி அதிகரித்தது. அவர் கண்களில், கொஞ்சம் உணவு கிடைக்காதா? என்ற ஏக்கம் எட்டிப்பார்த்தது. இதை வைத்து அந்த விவசாயியை மடக்க அவன் நினைத்தான்.
இதையடுத்து அந்த விவசாயிடம், ஐயா என்னிடம் உள்ள உணவை நான் பங்கிட்டு கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரியாத , நான் அறியாத, நான் கற்றுக்கொள்ளாத விஷயம் ஒன்றை நீங்கள் சொல்ல வேண்டும். அப்போது தான் என்னிடம் உள்ள உணவை உங்களுக்கு கொடுக்க முடியும் என்றான்.
விவசாயி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அந்த இளைஞனுக்கு சரியான பதிலடி கொடுத்தால் தான் அடங்குவான் என்று கருதினார். பின்னர் அந்த இளைஞன் நோக்கி, படித்த முட்டாள் தான் பெருமை பேசித்திரிவான் என்றார். தொடர்ந்து அவர், இது தான் இது வரை நீ கற்றுக்கொள்ளாத விஷயம், நான் அறிந்த விஷயம் என்றார்.
விவசாயி கூறிய இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டான் அந்த இளைஞன். தற்பெருமை, அகங்காரம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை அந்த இளைஞன் உணர்ந்து கொண்டான். தன்னை மன்னிக்கும்படி அந்த விவசாயிடம் கேட்டுக்கொண்டு, தனது உணவை மகிழ்ச்சியுடன் அவரிடம் பங்கிட்டுக்கொண்டான்.
இன்றைய செய்திகள் - 12.01.2023
* தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
* பெருநகரங்களின் அருகில் உள்ள நகரங்களிலும், பெருநகரங்களுக்கு இணையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நாளை முதல் 340 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
* இம்மாத இறுதிக்குள் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தயாராகும் என்று மத்திய அரசு தகவல்.
* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இணையும் - சர்வதேச கருத்துக் கணிப்பில் தகவல்.
* ஆண்களுக்கான ஐசிசி கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு: கோலி, ரோகித் முன்னேற்றம்.
* சென்னை மண்டல பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பி.எஸ்.பி.பி. மில்லேனியம் அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.
Today's Headlines
* The Tamil Nadu government has issued an order transferring 21 IPS officers in Tamil Nadu.
* Minister KN Nehru said that the government policy has decided to establish basic infrastructure in the cities near the metropolitan cities.
* 340 additional special buses will operate from Chennai from tomorrow on the occasion of Pongal festival.
* The central government informed that the new parliament building will be ready by the end of this month.
* In UNO India will join as a permanent member for the Security Council –Information on international poll.
* ICC Men's Cricket Rankings List Released: Goalie, Rohit Progress
* In Chennai Zone in between School teams, the 20 over cricket match was won by BSPP Millenium Team
Prepared by
Covai women ICT_போதிமரம்