குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான 146 ஊட்டச்சத்து உணவு வகைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் உடல்,மன ஆரோக்கியத்துடன் புத்திக்கூர்மையுள்ள மாணவர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதுடன், அவர்களது கற்றல் திறனும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சிறுதானியங்களின் பயன்பாடு கரோனா காலத்துக்கு பிறகு மிகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து தலைசிறந்த சமையல் கலைஞர்கள் அரசுக்கு பரிந்துரை அளித்தனர்.
அந்த வகையில் மத்திய அரசின் முழுமையான ஊட்டச்சத்துக்கான பிரதமரின் விரிவான திட்டம் மற்றும் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை இணைந்து கர்ப்பிணிகள், குழந்தைகள் ஊட்டச்சத்து உணவு வகைகளை வெளியிட்டுள்ளது. மொத்தம் 80 பக்கங்கள் கொண்ட 146 ஊட்டச்சத்து உணவு வகைகளை வெளியிட்டுள்ளது.
பலவகை பலகாரம்: இதில், சிறுதானிய உணவு வகைகள், அடுப்பில்லா சமையல், ஊட்டச்சத்துகளுடன் கூடிய இனிப்பு வகைகள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துகளுடன் கூடிய உணவு வகைகள், கர்ப்பகால மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்துகளுடன் கூடிய உணவு வகைகள், மூலிகை உணவு வகைகள் ஆகிய தலைப்புகளில் உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு உணவையும் செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள், அதன் செய்முறை விளக்கப்பட்டிருப்பதுடன், உணவின் வண்ணப் படங்களும் உள்ளன.
சிறுதானிய உணவு வகைகளில் கேழ்வரகு அடை, கம்பு கொழுக்கட்டை, ரொட்டி, சாமை புளி பொங்கல், தினைக் கொழுக்கட்டை, கம்பு பாலக் ரொட்டி, வரகு தக்காளி சாதம், சிறுதானிய புட்டு மிக்ஸ், தினை சைவ பிரியாணி, கம்பு பணியாரம், குதிரைவாலி அரிசி பிரியாணி, சோளப் பணியாரம், கம்பு அடை, கைக்குத்தல் அரிசி வடை குதிரைவாலி இட்லி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
அடுப்பில்லா சமையல் பிரிவில், வெள்ளரி வெங்காயம், வெண்பூசணி பச்சடி சாலட், சதைப்பற்று கலந்த பழங்கள், தேனுடன் மசித்த பழங்கள், ஆரஞ்சு பஞ்ச், தக்காளி பஞ்ச், பழத்தூள், பழப் பச்சடி, சிலு, சிலு ஜில் பானம், அஷ்டாவதானி ஜூஸ், மிக்ஸட் புரூட்ஷேக், முளைப்பயிறு கம்பு சாலட் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.
ஊட்டச்சத்துடன் கூடிய இனிப்பு வகைகளில் சாமை பொரி உருண்டை, தினை இனிப்பு பொங்கல், தினை அதிரசம், வெந்தய களி அல்வா, வரகு அல்வா, கம்பு பாயாசம், குதிரைவாலி இனிப்பு அடை, அருகம்புல் பாயாசம், கேழ்வரகு வேர்க்கடலை அல்வா, சாமை அரிசி சர்க்கரைப் பொங்கல், தினை அல்வா, சாமை பால் பாயாசம், கடலைப்பருப்பு இனிப்பு உருண்டை, தினை பாயாசம் ஆகியன வண்ணப் படங்களாக பார்த்தவுடன் சாப்பிடத் தூண்டும் வகையில் உள்ளது.
ஆரோக்கியமான தாயும் சேயும்: குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துகளுடன் கூடிய உணவு வகைகளில், போஷாக்கு கஞ்சி, சோள ஓலை கொழுக்கட்டை, சோள சுண்டல், மக்காச்சோளம் முந்திரி கொத்து, தினை புட்டு, கம்பு கொழுக்கட்டை, ராகி ரொட்டி, கூழ் தோசை என பட்டியல் நீள்கிறது. ஊட்டச்சத்து இட்லிகள், பருத்திவிதைப் பால், கோதுமை சேமியா கேசரியும் உண்டு.
கர்ப்பகால மற்றும் பாலூட்டும்தாய்மார்களுக்கான ஊட்டச்சத்துகளுடன் கூடிய உணவு வகைகளில், பன்னீர் டிக்கா, சாமை சிக்கன் பிரியாணி, சோள அடை, பூண்டு குழம்பு, பூண்டு சாதம், மதர்ஸ் ஸ்பெஷல் குழம்பு, ஏழு வகை எளிய பிரசவ கஷாயம், சுறா புட்டு, நெல்லிக்காய் தொக்கு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
மூலிகை உணவு வகைகளில் முடக்கத்தான் கீரை தோசை, பிரண்டைத் துவையல், வல்லாரைத் துவையல், முருங்கை சூப், சீரக சூப், ஆவாரம்பூ டீ, மணத்தக்காளி கீரை துவையல், உணவு வகைகளின் ருசியும், மணமும் அவற்றின் பயன்பாடும் கூறப்பட்டிருப்பது சிறப்பு. இந்த ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு வழங்குவதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியமிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
Click here to join whatsapp group for daily kalvinews update