பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.11.2022
திருக்குறள் :
பால் : அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: நீத்தார் பெருமை
குறள் : 30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
பொருள்:
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.
பழமொழி :
Action speaks louder than words.
சொற்களை விட செயல்கள் வலிமை வாய்ந்தவை.
இரண்டொழுக்க பண்புகள் :
1. சூரியன், மழை, மரம், ஆறு எதுவும் தனக்கென இருப்பதில்லை. அவைகளின் கனி, நீர், ஒளி, வெப்பம் அனைத்தும் பிற உயிர்களுக்கே.
2. இயற்கையை போலவே நானும் தன்னலமின்றி வாழ முயல்வேன்.
பொன்மொழி :
நாம் நமது நேரத்தை செலவிடும் விதம் நாம் யார் என்பதை வரையறுக்கிறது. --ஜோனதன் எஸ்ட்ரின்
பொது அறிவு :
1. இந்தியாவின் பட கேமராவை முதலில் தயாரித்தவர் யார்?
ஆனந்த் ராவ் .
2.கிளிசரைல் மற்றொரு பெயர் யாது ?
நைட்ரோ கிளிசரின்.
English words & meanings :
Pa-le-o-bo-ta-ny - study of ancient plants. பண்டைய தாவரங்கள் குறித்த அறிவியல் படிப்பு
ஆரோக்ய வாழ்வு :
ஒரு டீஸ்பூன் சோம்பு, அரை பட்டை மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூளை நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து ஆரியவுடன் பருகவும். வறட்டு இருமலுக்கு இதமாக இருக்கும்.
NMMS Q :
வலுவான இழை __________ஆகும்.
விடை: நைலான்
நீதிக்கதை
ஆந்தை பெற்ற சாபம்
கற்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன. ஆந்தைக் குஞ்சுகள் வளர வளர அம்மாவிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தன. ஒரு நாள், ஒரு ஆந்தைக்குஞ்சு அம்மா எல்லோரும் பகலில் தான் உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் பகலில் தூங்கிவிட்டு இரவில் இரை தேடுகிறோம். இது ஏன்? என்றது.
நமக்கு பகலில் கண் தெரியாது. இரவில் தான் கண் தெரியும். அதனால் தான் நாம் பகலெல்லாம் துங்கிவிட்டு இரவில் சென்று இரை தேடுகிறோம் என்றது தாய் ஆந்தை. ஏன் கடவுள் நம்மை மட்டும் இப்படி படைத்தார்? என்று கேட்டது இன்னொரு ஆந்தை குஞ்சு. கடவுள் மேல் தவறில்லை. முன்னொரு காலத்தில் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் செய்த தவறைத்தான் நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றது தாய் ஆந்தை. அப்படி என்ன தவறு செய்தார்? என்று கேட்டன குஞ்சுகள்.
ஒரு முறை நம் முன்னோர் ஒருவர் காகத்திடம் நட்பாக இருந்தார். ஒரு நாள் அந்த காகத்திற்கு உடல்நிலை சரியில்லை. அதனால், காட்டில் டாக்டராக இருந்த குயில் டாக்டரிடம் காக்காவிற்கு வைத்தியம் பார்த்து குணமாகிவிட்டது. அதன் பிறகு டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும் இல்லையா? ஆனால், இவர்கள் எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடிவந்துவிட்டனர்.
அதன் பிறகு இவர்கள் இருவரையும் பார்க்கும்பொழுதெல்லாம் பணம் கேட்க ஆரம்பித்தது குயில் டாக்டர். குயில் டாக்டருக்கு பயந்து நம்முடைய பாட்டனாரான ஆந்தையார், பகலில் தலைகாட்டாமல் நன்றாக தூங்கிவிட்டு இரவில் எழுந்து வெளியே செல்வார். இப்படியே இருந்ததால் குயில் டாக்டரால் ஆந்தையாரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கோபமடைந்த குயில் டாக்டர், காக்காவை பிடித்து நன்கு திட்டி இனிமேல் எங்கள் இனத்தார் இடும் முட்டைகளை எல்லாம் உன் இனத்தார் தான் காவல் காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது.
அன்றிலிருந்து குயில் இனத்தார் முட்டைகளை காக்கை இனம் வளர்த்து கொண்டு வருகிறது. நம்முடைய இனத்தார் பகலில் தூங்கி தூங்கியே நமக்கு பகலில் கண் தெரியாமல் போய்விட்டது என்றது தாய் ஆந்தை. அம்மா பிறரை ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம் காலம் காலமாக பலரை பாதிப்பதை புரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் ஒருநாளும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யவே மாட்டோம், என்றது அந்த இரு ஆந்தைக்குஞ்சுகள். செல்லமாக தன் குஞ்சுகளை அணைத்து முத்தமிட்டது தாய் ஆந்தை.
நீதி :
பிறரை ஏமாற்றினால் நமக்கு தண்டனை தானாக வந்து சேரும்.
இன்றைய செய்திகள்
02.11.22
* சென்னை மெட்ரோவில் அக்டோபரில் மட்டும் 61.56 லட்சம் பேர் பயணம்.
* மழையால் பாதிப்பு: நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.
* தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழையும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் வணிக வரி, பதிவுத் துறைகளின் வருவாய் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ரூ.23,066 கோடி கூடுதலாக ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
* சீன வீரர்களுடனான கல்வான் மோதல் எதிரொலி - வீரர்களுக்கு ஆயுதமின்றி போர் பயிற்சி.
* குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து: 100 பேர் மட்டுமே நிற்க வேண்டிய இடத்தில் ஒரே நேரத்தில் 500 பேர் வரை அனுமதி அளித்ததே விபத்துக்கு காரணம்.