கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமைச் செயல் அதிகாரியை (சிஇஓ) நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய முன் அனுபவம் உள்ள நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் சிஇஓ பணிக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (எஸ்சிஇஆர்டி), கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு, பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி வாய்ப்புகளை வழங்கி, கல்வி தொலைக்காட்சியை நடத்தி வருகிறது.
கரோனா நோய்த்தொற்றுகளின் போது தமிழ்நாட்டில் பள்ளிகள் இணையவழியில் செயல்பட்டு வந்த நேரத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கற்றல் குறைபாட்டை போக்கவும், கற்றல்-கற்பித்தல் பணிகளை வீடுகளுக்கே சென்று மேற்கொள்ளவும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு உதவிடும் வகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு கல்வித் தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது.
இதில், நாள்தோறும் வகுப்பு வாரியாக ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தும் விடியோக்கள் ஒளிபரப்பப்பட தொடங்கி, இன்றுவரை அவரை ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கல்வித் தொலைகாட்சி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், போட்டித்தேர்வர்களுக்கு ஏற்ற வகையில் மறுகட்டமைப்புக்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமைச் செயல் அதிகாரியை (சிஇஓ) நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் தயாரிப்பு மற்றும் நிர்வாகத்தில் குறைந்தபட்சம் 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய முன் அனுபவம் உள்ள நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் சிஇஓ பணிக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
எலக்ட்ரானிக் மீடியா, விசுவல் கம்யூனிகேஷன், கல்வி தொழில்நுட்ப ஊடகத்தில் பட்டம் பெற்றிருப்பதுடன், எழுத்து மற்றும் பேச்சுத் தமிழ் பற்றிய அறிவு. சிறந்த தகவல் தொடர்பு திறன்,கணிகளை கையாளும் திறன், நடைமுறைக்கேற்ற அனைவரும் விரும்பும் வகையிலான நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் திறன், நிர்வாகத்திறன், ஊடக வணிக திறன். விளம்பர வணிக வளர்ச்சி போன்றவற்றில் கூடுதல் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://forms.gle/KPvFRsK5JHwf9gd68 என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தகுதியான விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் நேர்முகத் தேர்வு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.