இந்தியாவில் திங்கள்கிழமை முதல் சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது. ''குழந்தைகளுக்கு தடுப்பூசி தேவையா என்பது குறித்து தற்சமயம் புள்ளிவிபரங்கள் அதிகம் இல்லாததால், முறையான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்'' எனக் கேள்வி ஒன்றுக்கு பிரபல வைரலாஜி நிபுணர் ககன் தீப் காங் பதில் அளித்துள்ளார்.
இந்தியாவில் 15 முதல் 18 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. கடந்த நவம்பர் மாதம் ஒமிக்ரான் எனப்படும் கொரோனா வைரஸ் திரிபு கண்டறியப்பட்டது.
இந்தியாவிலும் ஒமிக்ரான் தாக்கம் படிப்படியாக உயர்ந்து கொண்டிருப்பதால், குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது.
இதுதொடர்பாக, நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, ` ஜனவரி 3 ஆம் தேதி முதல் சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது' என்றார். மேலும், ஜனவரி 10ஆம் தேதி முதல் மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், இணை நோய்கள் உள்ள அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, 15 முதல் 18 வயதுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான பதிவு தொடங்கியுள்ளது.
தடுப்பூசி ஏற்படுத்திய விவாதம்
அதேநேரம், குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் முடிவை அறிவியல்பூர்வமற்றதாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த தொற்றுநோயியல் மருத்துவர் சஞ்சய் கே ராய் தெரிவித்திருந்தார். இவர் கோவேக்சின் தடுப்பூசி சோதனைகளில் பிரதான அங்கம் வகித்தவர். `குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய நாடுகளின் தரவுகளையும் ஆய்வு செய்ய வேண்டும்' எனவும் சஞ்சய் கே ராய் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, கொரோனா நோய்த் தொற்றின் தீவிரமானது குழந்தைகளிடையே மிகக் குறைவாக உள்ளதாகவும் பத்து லட்சம் மக்கள் தொகைக்கு இரண்டு இறப்புகள் மட்டும் பதிவானதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த ட்வீட் விவாதப் பொருளாக மாறியதால், தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய தொழில்நுட்பக் குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா, சில விளக்கங்களை அளித்தார். ` கொரோனா காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்தான். அரசின் இந்த முடிவின் மூலம் சிறுவர், சிறுமிகளைப் பாதுகாக்க முடியும். இவர்கள் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும்போது தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதன்மூலம் அவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்கும் பரவும். தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நன்மையே அதிகம்' என்றார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஜெயந்தி, ` கொரோனா தொற்றின் பல்வேறு திரிபுகளை நாம் பார்த்தாலும் தொற்று குறையவில்லை. அனைத்து மட்டத்திலும் நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனை குழந்தைகள் நல அகாடமியான ஐஏபி அமைப்பும் பரிந்துரைத்துள்ளது. குழந்தைகளுக்கான தடுப்பூசி பாதுகாப்பது என்பதற்கான தரவுகள் வந்துள்ளன' என்றார்.
7 கேள்விகள், மருத்துவர் ககன்தீப் காங் சொல்வது என்ன?
பதில்: ``பொதுவாக மரபணு பிறழ்வு காரணமாக ஒமிக்ரான் தொற்று தடுப்பூசிகளுக்கு சரியாக கட்டுப்படுவதில்லை. கோவேக்சினுக்கும் அதே நிலைதான். ஆக, அதுகுறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தடுப்பூசிகளின் திறன் குறிப்பிட்ட காலத்துக்குப்பின் குறைவதால், தடுப்பூசிகள் மேற்கொண்டு தேவையா என ஆராயப்பட வேண்டும்".