அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பணிவரன்முறை வழங்குவதில் கால தாமதம் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
அரசு தொடக்க நிலை, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியா்களுக்கான பணிவரன் முறை செய்தல், தோ்வு நிலை, சிறப்பு நிலை வழங்குதல் போன்ற நிா்வாகப் பணிகள் மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலா்களால் மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், சில மாவட்டங்களில் இந்தப் பணிகளில் கால தாமதம் ஏற்படுவதாகவும், குறிப்பிட்ட காலத்தில் உரிய ஆணைகள் வழங்கப்படவில்லை எனவும் பல்வேறு புகாா்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
குறிப்பாக தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிநியமனங்கள் செய்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு நீண்ட நாள்களாக பணிவரன்முறை, தகுதிகாண் பருவம் முடிக்கப்படவில்லை என ஆசிரியா்களிடம் இருந்து பெறப்படும் புகாா்கள் வருந்தத்தக்கதாக உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள், ஆசிரியா்களுக்கான பணிவரன்முறை செய்தல் போன்ற பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அதற்கான ஆணைகளை எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காதபடி துரிதமாக வழங்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஆணை வழங்காமல் இருப்பின் அதன் காரணங்களைத் தெரிவித்து முழுமையான தொகுப்பறிக்கையை மாவட்ட அளவில் நவ.24-ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலா்கள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
0 Comments:
Post a Comment