சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள 499 பணியிடங்களில், 243 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6 மாதத்தில் நேரடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சென்னை மாநகராட்சிக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி, சென்னை மாநகராட்சி தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் எந்த விதியின் கீழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இடமாற்றம் மூலமாக நியமிப்பதாக இருந்தால் அதற்கு எந்த பணி விதி ஒப்புதல் அளிக்கிறது, உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கு விளக்கம் அளிக்குமாறு மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக மாநகராட்சிக்கு என தனி விதிகள் இல்லை. எனவே, பள்ளிக்கல்வித் துறை விதிகளே பின்பற்றப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதத்தை நேரடி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்.
எனினும் கடந்த 10 ஆண்டுகளாக நேரடி தேர்வு நடத்தவில்லை. தற்போது காலியாக உள்ள 499 ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத பணியிடங்களான 243 பணியிடங்களை நிரப்பக் கோரி இரு வாரங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை மாநகராட்சி கடிதம் எழுத வேண்டும்.
மாநகராட்சியின் கடிதம் கிடைத்ததும் போர்க்கால அடிப்படையில் ஆறு மாதங்களில் தேர்வு நடவடிக்கைகளை முடித்து, இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி, தேர்வானவர்கள் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் சென்ைன மாநகராட்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மாநகராட்சி பள்ளிகளின் தேவையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக இடமாற்றம் மூலம் நியமிக்கப்படும் 79 ஆசிரியர்களும், நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நியமனம் செய்யப்பட்டதும், தங்கள் சொந்த அலகுக்கு திரும்ப வேண்டும்.
பதவி உயர்வு மூலம் நியமிக்க வேண்டிய 50 சதவீத ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலை தயாரித்து மூன்று மாதங்களில் வெளியிட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
0 Comments:
Post a Comment