6 முதல் 8ம் வகுப்பு வரை ‘காலை உணவு’ - தமிழகத்தில் முதல் முறையாக மதுரை பள்ளிகளில் தொடக்கம்

 


1141485

முதலமைச்சர் ஸ்டாலின் அரசு தொடக்கப்பள்ளிகளில் தொடங்கி வைத்த காலை உணவு திட்டம் மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழகத்திலே முதல் முறையாக 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களும் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு இந்த திட்டத்தில் காலை உணவு வழங்கப்படுகிறது.


தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின் இந்த திட்டம் 38 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு காலை உணவுத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த திட்டத்தில் 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள் என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு 1,14,095 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலமாக பயன்பெற்று வருகிறார்கள்.


மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் முதலமைச்சரின் இந்த காலை உணவு திட்டம் தமிழகத்திலே முதல் முறையாக 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டு, சத்தமில்லாமல் அந்த மாணவர்களும் மாநகராட்சி காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. இந்த திட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளை தவிர்த்து மற்ற வகுப்புகள் (6 முதல் 8 வரை) படிக்கும் மாணவ, மாணவிகளும் பயனடையும் வகையில் கூடுதலாக இந்த திட்டத்தில் 1,350 பேருக்கு தனியார் சமூக பங்களிப்பின் மூலம் காலை உணவு வழங்கப்படுகிறது.


இதுகுறித்து மேயர் இந்திராணி கூறுகையில், ‘‘மதுரை மாநகராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு கள்ளழகர் உயர்நிலைப்பள்ளி உள்பட மொத்தம் 74 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 7,197 மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள். மாநகராட்சி பள்ளிகளில் அடித்தட்டு மக்களுடைய குழந்தைகளே பெரும்பாலும் படிப்பதால் அவர்களில் 6 முதல் 8 படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்களும் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள்.


இதை ஒரு முறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நான் போன்றோர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ய சென்றபோது கண்டறிந்தோம். அப்போது 6ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர் காலை உணவு சாப்பிட முடியாமல் பசியுடன் நின்று கொண்டிருந்தார். அழைத்து பேசியபோது அந்த மாணவர் வீட்டில் தினமும் காலை உணவு தயார் செய்வதில்லை என்றும், மதிய உணவை நம்பிதான் பள்ளிக்கு வருவதாக தெரிவித்தார். உடனே அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இதுபோன்ற மாணவர்களும் பயனடையும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்யும் படி எங்களை கேட்டுக் கொண்டார்.


அதன் அடிப்படையில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி மூலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கும் பயனடையும் வகையில் காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்தி உள்ளோம், ’’ என்றார்.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

0 Comments:

Post a Comment