பொதுத் தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தில் கடலூர் மாவட்டம் 31-வது இடம், 30-வது இடம் என கடைசி இடங்களிலேயே நீடித்து வருவது கவலையளிக்க கூடியதாக உள்ளது.
இதற்கிடையே, கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ், கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்துப் பாடப்பிரிவு ஆசிரியர்களிடம் தேர்ச்சி விகிதம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்த வகையில் கடந்த வாரத்தில் குறிஞ்சிப்பாடி, குமராட்சி, காட்டுமன்னார்கோவில் ஒன்றியங்களைச் சேர்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுடன் தேர்ச்சி விகித ஆய்வுக்கூட்டம் ஒன்றையும் நடத்தினார்.
அப்போது, “நீங்கள் எந்தக் காரணமும் சொல்லக் கூடாது, ஒவ்வொரு பாடத்திலும் அந்தந்த ஆசிரியர்கள், 100 சதவீத தேர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். தலைமையாசிரியரும் தேர்ச்சி விகிதத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். பின் தங்கிய மாவட்டம், கரோனா தொற்று ஊரடங்கால் ஏற்பட்ட தொய்வு இப்போது வரையிலும் தொடர்கிறது போன்ற காரணங்களைக் கூறி, தேர்ச்சி விகித குறைவை நியாயப்படுத்தக் கூடாது” என கறாராக கூறிச் சென்றிருக்கிறார்.
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 246 அரசுப் பள்ளிகள், 46 அரசு உதவி பெறும் பள்ளிகள், 153 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 445 பள்ளிகளைச் சேர்ந்த 34,184 மாணவ, மாணவியர் கடந்தாண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். இதில், 30,248 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி விகிதம் 88.49 என்பதால் மாநில அளவில் 33-வது இடத்துக்கு தள்ளப்பட்டது கடலூர் மாவட்டம்.
அதேபோன்று பிளஸ் 2 பொதுத் தேர்வில் 117 அரசுப் பள்ளிகள், 30 அரசு உதவி பெறும் பள்ளிகள், 98 தனியார் பள்ளிகள் என மொத்தம் 245 பள்ளிகளில் இருந்து 30,270 மாணவ, மாணவியர் தேர்வெழுதியதில் 27,859 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் 92.04 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 27 இடத்தை பிடித்தனர்.
மாநில அளவில் பொதுத்தேர்வு முடிவுகளின்படி முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மாவட்டங்களுக்கும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. அதாவது, முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவு. அதே நேரத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம். இதனால் விகிதாச்சார அடிப்படையில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் பின்தங்கி விடுகின்றன. இது பலருக்கு புரிவதில்லை என்கின்றனர் கடலூர் மாவட்ட ஆசிரியர்கள்.
மேலும் ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், “பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த முற்படும் கடலூர் ஆட்சியரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. அதே நேரத்தில், கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையும், அவர்கள் எந்த மாதிரியான சூழலில் இருந்து பள்ளிக்கு வருகிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
‘தலைமையாசிரியர் முதல் உடற்கல்வி ஆசிரியர் வரை அனைவரின் கைகளையும் பின்நோக்கி கட்டி விட்டு, மாணவர்களை படிக்க வையுங்கள்’ என்று கூறும் சூழல் இங்குள்ளது. ஊரகப் பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களை படிக்கச் சொல்லி சற்று கடுமை காட்டினால் ஆசிரியர்களின் மீது நடவடிக்கை பாய்கிறது, இது எந்த விதத்தில் நியாயம்?
இன்றைய தலைமுறையினர் குறித்து ஆட்சியருக்கு நாங்கள் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு மாணவரையும் அடிக்க மட்டுமல்ல; கண்டிக்கவும் முடியவில்லை. மாணவர்களின் ‘ஹீரோயிஸ அட்டூழியங்கள்’ தாங்க முடியவில்லை. கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளுக்குள் வரும் மாணவர்களில் சிலர் அரசியல், சமூக அமைப்புகளைச் சார்ந்து இயங்குகின்றனர்.
இவர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர வேண்டிய நன்னெறி வகுப்புகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் மாணவர்களை ஒருநிலைக்கு கொண்டு வர வேண்டும். அதோடு கல்வி கற்றலை முன் நிறுத்தினால் இதில் எதிர்பார்க்கும் பலன் ஓரளவு கிடைக்கும். அதை விடுத்து. ஆசிரியர்களை நெருக்கடியில் தள்ளுவதால் எந்தப் பயனும் இல்லை” என்கின்றனர்.
இது ஒரு புறம் என்றால் மற்றொரு புறத்தில் ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலவுகிறது. ஒரு பள்ளியில் பாட ஆசிரியர் ஓய்வு பெற்றால் அவருக்கு மாற்றாக ஆசிரியர் பணியிடத்தை நிரப்புவது கிடையாது. இதையும் கடலூர் மாவட்ட ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“ஆட்சியரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நாங்கள் கடமைப்பட்டிருக்கும் அதே நேரத்தில், எங்கள் தரப்பில் நிலவுகின்ற, ஆசிரியர் பற்றாக்குறை, பள்ளிக்கான சுற்றுச்சுவர், கழிப்பறைகள் பராமரிப்பு, மாணவர்களைக் கட்டுப்படுத்துவற்கான அதிகாரம் போன்றவைகளை அவர் பெற்றுத்தர முன்வர வேண்டும்” என்கின்றனர் ஆசிரியர்கள்,
ஒவ்வொரு பள்ளியிலும் இயங்கும் பெற்றோர் ஆசிரிரியர் கழகம், கல்வி வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரையும் பொறுப்புக்குள்ளாக்கி அவர்களையும் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதில் ஈடுபடச் செய்து, இலக்கை நிர்ணயித்தால் ஆட்சியரின் எதிர்பார்ப்புகள் நிறைவேற வாய்ப்புண்டு என்கின்றனர் விவரமறிந்த ஆசிரியர்கள்
0 Comments:
Post a Comment