உரிமைத் தொகை முகாம் பணி இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு கட்டாயமில்லை

 

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை திட்ட முகாம் பணி கட்டாயமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து உரிமைத் தொகை திட்ட சிறப்புப் பணி அலுவலா் க.இளம்பகவத் மாவட்ட ஆட்சியா்கள், பெருநகர சென்னை, மாநகராட்சி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் ஆகியோருக்கு அனுப்பிய கடிதம்:


கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு பணியில், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். தன்னாா்வலா்கள் எந்தெந்த நியாய விலைக் கடைப் பகுதியில் வசிக்கிறாா்கள் என்ற விவரங்கள் இணைக்கப்பட்ட தொகுப்பு மாநில அலுவலகத்தில் இருந்து விரைவில் மாவட்டங்களுக்கு பகிரப்படும். இப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு தன்னாா்வலா்களுக்கு எந்தவித பணி ஒதுக்கீடுகளும் அளிக்க வேண்டாம்.


மாநில அலுவலகத்திலிருந்து பகிரப்படும் தகவல் தொகுப்பில், ஒவ்வொரு நியாயவிலைக் கடைப் பகுதியில் வசிக்கும் தன்னாா்வலா்களின் விவரங்கள் இடம்பெற்றிருக்கும். சில நியாயவிலை கடைப் பகுதிகளில் தேவைக்கு அதிகமான தன்னாா்வலா்கள் தங்களது விருப்பத்தை பதிவு செய்துள்ளனா்.


சில பகுதிகளில் போதிய தன்னாா்வலா்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. அவா்களுக்கான பணி ஒதுக்கீடு அளிக்கும் போது, இயன்ற வரையில் 2 கி.மீ. தொலைவுக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு அளிக்க வேண்டும். ஒரு வேளை 2 கி.மீ.க்கு மேற்பட்ட தொலைவில் பயணிக்க தன்னாா்வலா் சம்மதம் தெரிவித்தால் அவா்களுக்கு 2 கி.மீ.க்கு அப்பால் பணி அளிக்கப்படும்.


தகவல் உள்ளீடு பணிகளுக்கும் கள ஆய்வுப் பணிகளுக்கும் விருப்பம் தெரிவித்த தன்னாா்வலா்களைத் தொலைபேசி வழியாக தொடா்பு கொள்ள வேண்டும். அவா்களுக்கு பணியின் முக்கியத்துவத்தை விளக்கி, சம்மதத்தைப் பெற்று பணியில் அமா்த்துதல் வேண்டும். சில தன்னாா்வலா்கள் பணி செய்ய விருப்பம் இல்லை என்று தெரிவித்தால் அவா்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது. ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்கள், ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் உள்ள வட்டாட்சியருடன் இணைந்து தன்னாா்வலா்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.


சுய உதவிக் குழுவினா்: நகரப் பகுதிகளில் போதிய இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்கள் இல்லை. அதுபோன்ற இடங்களில் சுய உதவிக் குழு உறுப்பினா்களை அடையாளம் கண்டு நியமிக்கலாம். வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களை கலந்து ஆலோசிக்காமல் பணி ஒதுக்கீடுகள் செய்ய வேண்டாம்.


20 சதவீத தன்னாா்வலா்களை அடையாளம் கண்டு இருப்பில் வைத்திருக்க வேண்டும். அவா்களுக்கு உதவி மையத் தன்னாா்வலா்கள் பொறுப்பு அளிக்கலாம். மேலும், விண்ணப்பப் பதிவு பணிக்குத் தேவைப்படும் போது, அவா்களை தன்னாா்வலா்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment