கற்போருக்கான புதிய செயலி அறிமுகம்: மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என அமைச்சர் உறுதி

 

தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கற்போருக்கான புதிய செயலி - மணற்கேணி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்தச் செயலி மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


`மணற்கேணி’ என்ற பெயரில் கற்போருக்கான புதிய செயலியை, தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி வெளியீட்டு நிகழ்ச்சி, தாம்பரத்தை அடுத்த சேலையூர், தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடைபெற்றது.


மணற்கேணி - கற்போருக்கான செயலியை, யு.என்.சி.சி.டி., துணை பொது செயலர் மற்றும் நிர்வாக செயலருமான இப்ராஹிம் தயாவ் வெளியிட்டார். நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தாம்பரம் எம்எல்ஏ ராஜா, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கு மட்டுமே காணொலி பாடங்கள் கிட்டும் என்ற நிலையை போக்கி அவற்றை அனைவருக்குமானதாக மாற்றும் நோக்கத்திலேயே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.


மணற்கேணி செயலி, தமிழ் மற்றும் ஆங்கிலம் என, இரு மொழிகளிலும், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாநில பாடத் திட்டத்தில் உள்ள பாடங்களை, 27,000 பாடப் பொருள்களாக, வகுப்புகள் தாண்டி வகைபிரித்து, அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு காணொலி முடிவிலும் கேள்விகள் கேட்கப்பட்டு, கற்போரின் புரிதல் திறனை சரிபார்க்கும் வசதியும் உள்ளது. மேலும், பாடங்களை எளிதில் புரிந்து கொள்வதற்கும், எதையும் விட்டு விடாமல் படிப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இச்செயலி இலவசமாக வழங்கப்படுகிறது.


இச்செயலியை, `ப்ளே ஸ்டோரில்’ எந்த தடையும் இன்றி, எளிதாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது, பிளஸ் 2 முதல் பருவத்துக்கான பாடங்களோடு இச்செயலி வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு வகுப்புக்கும், காணொலிகளும், கேள்விகளும் தயாராக தயாராக இச்செயலில் பதிவேற்றம் செய்யப்படும். தமிழகத்தில் மட்டுமின்றி உலகத்தில் எந்த இடத்தில் உள்ள தமிழர்களும், இச்செயலியை பயன்படுத்தலாம்.


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கி அளித்துள்ள காணொலிகள் இச்செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மணற்கேணி செயலி வாயிலாக ஆசிரியர்கள் கற்பிப்பதன் மூலம் வருங்காலங்களில் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் என்றார். பின்னர் மணற்கேணி செயலியை தொடங்கி வைத்த இப்ராஹிம் தயாவ் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.


 Click here for latest Kalvi News 

0 Comments:

Post a Comment