அங்கன்வாடி பணியாளர் காலி பணியிடங்களில் 10 ஆண்டு பணியில் இருந்த அங்கன்வாடி உதவியாளர்கள் நியமனம்: வயது வரம்பை தளர்த்தி அரசு உத்தரவு

 அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியாளர் பணியிடங்களில் 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த அங்கன்வாடி உதவியாளர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கான வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. 


ஒன்றிய அரசு சார்பில் கடந்த 1975ம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ஐசிடிஎஸ்) திட்டத்தின் கீழ் அடித்தட்டு குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நாடு முழுவதும் பால்வாடி எனப்படும் அங்கன்வாடி மையங்கள் தொடங்கப்பட்டன. தமிழ்நாட்டில் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.

பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சத்தான உணவு, ஆரம்பகால கல்வி கிடைப்பதை இம்மையங்கள் உறுதி செய்கின்றன. இம்மையங்களில் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் என ஏறத்தாழ 1 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அதேநேரத்தில் தமிழகத்தில் 5 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், ஒரு பணியாளரே பல மையங்களை கவனிக்க வேண்டியுள்ளதாலும் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வந்தன.


அதன் அடிப்படையில் தற்போது அரசு அங்கன்வாடி உதவியாளர்களாக 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களை அங்கன்வாடி காலி பணியாளர் இடங்களில் நிரப்ப உத்தரவிட்டுள்ளது. அரசின் விதிமுறைப்படி அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கான நியமனத்துக்கு விண்ணப்பதாரர்கள் 20 வயது நிறைவு செய்தும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர் நியமனத்துக்கு 25 வயது நிறைவு செய்தும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


அதேநேரத்தில் அங்கன்வாடி பணியாளர் காலியிடங்களில் 25 சதவீதத்தை 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த அங்கன்வாடி உதவியாளர்களை கொண்டு நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், 20 வயதில் பணியில் சேர்ந்த அங்கன்வாடி உதவியாளர் 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்து, நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளை பெற்றிருப்பின் அவர் 30 வயதை எட்டியிருப்பார். ஆனால் அங்கன்வாடி பணியாளர் நியமனத்துக்கு 35 வயது என்று குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 இந்த இடர்பாட்டை களையும் வகையில் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றி வரும் உதவியாளர்களுக்கு 10 ஆண்டு பணி நிறைவு செய்திருந்தாலே போதும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதுடன், அந்த உத்தரவில் வயது வரம்பிலும் தளர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment