18 வருடங்களாக பதவி உயர்வு இன்றி தவிக்கும் அலகு விட்டு அலகு மாறுதல் மற்றும் ஈர்த்து கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமையை நிர்ணயம் செய்ய மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சரிடம் அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டமானது 14.05.2023 அன்று திருநெல்வேலியில் மாநிலத் தலைவர் திரு செல்வராஜ் தலைமையில் கூட்டப்பட்டது. இதில் மாநிலப் பொதுச் செயலாளர் திரு சுந்தரபாண்டியன் , மாநிலப் பொருளாளர் திரு ராஜா முகம்மது , மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு சந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திரு சங்கர நாரயணன், திரு இராமநாதன் ,திரு குருவிநாயகம், திருமதி இந்துமதி , திருமதி மகராசி , திருமதி செண்பகலதா ஆகியோர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளி கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் பின்வரும் பணப்பலன் இல்லா கோரிக்கையினை நடைமுறைப்படுத்திட வேண்டி அக் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
2003 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு
தொகுப்பூதியத்தில் பட்டதாரி ஆசிரியர்களாக தொடக்கக்கல்வி இயக்ககம் கீழ் உள்ள
நடுநிலைப்பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டோம்.
நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் போது ஈர்த்துக் கொள்ளப்பட்டும் மற்றும் 2009-இல் அலகு விட்டு அலகு மாறுதல் மூலம் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு அதே பணி நிலையில் பட்டதாரி ஆசிரியர்களாக மாறுதல் பெற்றோம். தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இருந்து பள்ளிக்கல்வித் துறைக்கு வந்த நாள் தான் எங்களது பணி மூப்புக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது இதனால் கடந்த 18 ஆண்டுகளாக எந்தவித பதவி உயர்வும் பெறாமல் அதே நிலையில் பட்டதாரி ஆசிரியர்களாக தொடர்ந்து பணிபுரிந்து வருகிறோம். மேலும் ஒரே பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக 17 வருடங்களாக பணியாற்றியும் அப்பள்ளி தரம் உயர்த்தப்படும் போது பள்ளிக் கல்வித்துறைக்கு ஈர்த்து கொள்ளப்பட்ட நாளினைக் பணியில் சேர்ந்த நாளாகக் கொண்டு வேறு மாவட்டங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட்டு பட்டதாரி ஆசிரியர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் .
பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் நிபந்தனை சட்டம் 2016 விதி 40(2) ன் படி ஒரு பதவியில் பணிமூப்பு நிர்ணயம் செய்யும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட முறையிலான நியமன முறை இருப்பின் (நேரடி நியமனம், பதவி உயர்வு, கருணை அடிப்படை, துறை மாறுதல் மற்றும் பிற) அப்பதவியில் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற விதிப்படி 2019ம் ஆண்டு அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் 18258/சி1/இ1/2018 நாள்:26.07.2019 ன் படி தயார் செய்யப்பட்ட முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் விதி 40(2) ன் படி உரிய இடத்தில் எங்களது பெயர்கள் உள்ளன.
மேற்கண்ட செயல்முறைகள் மற்றும் அதன்படி தயார் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் 2019 ம் ஆண்டில் மாண்புமிகு சென்னை உயர் நீதி மன்றத்தில் உயர்திரு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.எனவே பள்ளிக் கல்வி இயக்குநரால் வெளியிடப்பட்ட முன்னுரிமைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு (முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்) கலந்தாய்வினை நடத்துமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் அரசாணை(நிலை) எண் 48, நாள் 01.03.2023 ன் படி 4 மாவட்டங்களிலிருந்து சென்னை பெருமாநகராட்சியின் கீழ் இணைக்கப்படவுள்ள 139 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் முதுநிலை தமிழ்நாடு அரசு பணியாளர் பணி விதிச் சட்டம் 2016 ன் படி பாதுகாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால், நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆதிதிராவிட மற்றும் கள்ளர் துறைப்பள்ளிகள் இணைக்கப்படவுள்ளதாகவும் இணைக்கப்படும் ஆசிரியர்களின் மூதுரிமை பாதுகாக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரே துறையின் கீழ் பணிபுரிந்து பள்ளிக்கல்விக்கு அலகு விட்டு அலகு மாறுதல் மற்றும் ஈர்த்துக் கொள்ளப்பட்டு 18 வருடங்களாக பணி மூதுரிமை இழந்து நிற்கும் 12000 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களாகிய எங்களுக்கும் மேற்கண்ட அரசாணைகளின் படி பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமை நிர்ணயிக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். மேற்காணும் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Click here to join whatsapp group for daily kalvinews update
0 Comments:
Post a Comment