பாடத்திட்டத்தை மேம்படுத்த யு.ஜி.சி., உத்தரவு

 'இந்திய உயர்கல்வி நிறுவனங்கள், டெக்ஸ்டைல் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளித்து, பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும்' என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக, யு.ஜி.சி., சார்பில், உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:


துணிநுால் எனப்படும், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம் என்பது, துணிகள் தயாரிப்பு மட்டுமின்றி, வேளாண்மை, மருத்துவம், உள்கட்டமைப்பு, தானியங்கி, விண்வெளி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளுக்கு தேவையான துணி சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது.


சமீபகாலமாக டெக்ஸ்டைல் துறை, சர்வதேச அளவில், 'டிரெண்ட்'டாக மாறியுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதியிலும் பொருளாதார அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே, டெக்ஸ்டைல் தொழில்நுட்பம் மற்றும் அந்தத் துறை சார்ந்த வளர்ச்சியை மேற்கொள்ள, 1,400 கோடி ரூபாய் மதிப்பில், புதிய திட்டங்களை மத்திய அரசு வகுத்துள்ளது.


டெக்ஸ்டைல் துறையில், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, வளர்ச்சி, ஊக்குவித்தல், சந்தை மேம்பாடு, ஏற்றுமதி, கல்வி, திறன் மேம்பாடு, தொழில்நுட்ப பயிற்சி உள்ளிட்ட பிரிவுகளில், வளர்ச்சியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், டெக்ஸ்டைல் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பாடத் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். டெக்ஸ்டைல் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்களை, கல்லுாரிகள், பல்கலைகளில், அதிகம் ஏற்படுத்த வேண்டும்.


இதுகுறித்து, மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள டெக்ஸ்டைல் தொழில்நுட்ப வழிகாட்டு முறைகளை பின்பற்றி, இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.


இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


0 Comments:

Post a Comment