பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை மறுநாள் துவக்கம்

 பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, நாளை மறுநாள் துவங்குகிறது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, மார்ச் 14; பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 13ம் தேதியும் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.


இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, மார்ச் 1ம் தேதியான நாளை மறுநாள் துவங்குகிறது. மாநிலம் முழுதும், 3,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உட்பட, 5,000 பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில், செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது.


சம்பந்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளின் ஆய்வகங்களில், உரிய வகையில் ரசாயன பொருட்களும், ஆய்வக பயன்பாட்டு பொருட்களும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.


அவற்றை பயன்படுத்தி, எந்த முறைகேடும், குளறுபடியுமின்றி, செய்முறை தேர்வை நடத்த வேண்டும் என, பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.


இந்த செய்முறை தேர்வை, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், தொழிற்கல்வி பாடங்கள் உள்ளிட்டவற்றுக்கு, பாட வாரியாக அட்டவணை தயாரித்து, வரும் 9ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


செய்முறை தேர்வுக்கு, அரசு தேர்வுத் துறை வழங்கியுள்ள பட்டியலில் உள்ள அனைத்து மாணவர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும். யாரையும் தேர்வு எழுத விடாமல் தடுக்கக் கூடாது.


தேர்வுத்துறையால் சலுகை அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும், செய்முறை தேர்வு நடத்த வேண்டாம் என்று, தலைமை ஆசிரியர்கள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.



0 Comments:

Post a Comment