சென்னை மாநகராட்சி பள்ளிகளை ரூ.200 கோடி மதிப்பில் தனியார்நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் நிதி பங்களிப்பில் டிஜிட்டல்மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சி பள்ளிகளில் 98 ஆயிரத்து 633 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 3 ஆயிரத்து 13 ஆசியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியார் பள்ளிகளுக்கு நிகராக சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளில் டிஜிட்டல் முறையிலான வள வகுப்பறைகள் அமைத்தல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கற்கும் முறை, நிர்பயா திட்டத்தின்கீழ் பெண்களுக்கான கழிப்பறைகள் அமைத்தல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறுவுதல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் ஆகியவை இணைந்து “மாநகராட்சி பள்ளிகளில் முழுமையான மாற்றம்” என்றஅடிப்படையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு, கற்பித்தல் முறை, ஆசிரியர்களின் பயிற்சி, விளையாட்டு மற்றும் இதர வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இது மாநகராட்சி பள்ளிகளை பல பரிமாணங்களில் முழுமையாக மாற்றும் முயற்சியாகும்.
இப்பள்ளிகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்திட சிட்டிஸ் (CITIIS), நமக்கு நாமே திட்டம், ஸ்மார்ட் சிட்டி, சிங்கார சென்னை 2.0 மற்றும் நிர்பயா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின்கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் (CSR Fund) பள்ளிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உறுதுணையாக உள்ளன.
இப்பணிகளின் தொடர்ச்சியாக, மாநகராட்சியின் 10 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளில் ஸ்மார்ட் போர்டு,ஆசிரியர்களுக்கு மடிக்கணினி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய மேசைகள், ஒரு ஆண்டு்க்கு இணைய வசதி, வண்ணமயமான ஓவியத்துடன் கூடிய வகுப்பறைகள் ஆகியவற்றை ரூ.56 லட்சத்து 60 ஆயிரம் செலவில் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இப்பணிகளுக்கு ‘டோரண்ட் கேஸ் சென்னை பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் “நமக்குநாமே” திட்டத்தின்கீழ் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில் ரூ.28 லட்சத்து 87 ஆயிரம் வழங்கியுள்ளது. சென்னையின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நிதி பங்களிப்புடன் சுமார் ரூ.200 கோடியில் மாநகராட்சிப் பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன.
மாநகராட்சியில் பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு நிதியுடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளி உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளலாம். விருப்பம் உள்ள நிறுவனங்கள் அல்லது பொதுமக்கள், வட்டார துணை ஆணையர்கள் மற்றும் மண்டல அலுவலர்களை தொடர்புகொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கேட்டுகொண்டுள்ளார்.
- எஸ்.கார்த்திகேயன்
0 Comments:
Post a Comment