நன்றாகப் படிக்கும் மாணவரே என்றாலும் கூட, தேர்வு என்றதுமே அவர்களுக்குள் ஒருவித பயமும் பதற்றமும் சேர்ந்துவந்து ஒட்டிக் கொள்கிறது. இது அவர்களது புத்திக்கூர்மையையும் செயல்திறனையும் ஆற்றமையும் குறைப்பதாக அமைகிறது. இதனைச் சரியாக கையாளக் கற்றுக்கொண்டால், தேர்வை பயமின்றி எதிர்கொள்ளலாம். தூள் கிளப்பலாம். மாணவர்கள் சுலபமாக பின்பற்றக்கூடிய சில டிப்ஸ்கள் இதோ...
முதலில், தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பாக படித்துக்கொள்ளலாம் என்கிற அலட்சியப் போக்கை வைத்துக்கொள்ளாதீர்கள். அந்த ஓர் ஆண்டினை முழுமையாக படிப்பதற்கு என்று அர்ப்பணித்தால் மட்டுமே நீங்கள் பெற நினைத்த மதிப்பெண்ணை வாங்கிட முடியும். இவ்வளவு நாளாக சும்மா இருந்துவிட்டு, இப்போது என்ன செய்வது எனும் பதற்றம் கொள்ள வேண்டாம்.
மீதமிருக்கும் நாட்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டாலே போதும். உங்கள் திறனுக்கேற்றவாறு படிப்பதற்கென்று ஒரு அட்டவணையை தயார் செய்யுங்கள். பத்துப் பாடங்களில் எட்டுப் பாடங் களைக்கூட முழுமையாகப் படித்தால் போதும். பத்தையும் நுனிப்புல் மேய்வதை தவிருங்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம் தூக்கம். எந்நேரமும் படிப்பு, படிப்பு என்று இருக்காமல் 8 மணி நேரம் தூக்கம் அவசியமானது. தூக்கத்தைக் குறைத்து படித்துக்கொண்டே இருந்தால், சோர்வு உண்டாகி, படிப்பது மறந்துபோகக்கூடும். எப்போது படித்தாலும் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்த வேண்டும்.
தினமும் இரவில் தூங்கச் செல்லும் நேரத்தையும், காலையில் எழும் நேரத்தையும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். தூங்கச் செல்லும் முன்பாக தொலைக்காட்சி பார்ப்பதும், செல்பேசியில் நேரத்தைச் செலவிடுவதும் நமது தூக்கத்தையும் கவனத்தையும் பாதிக்கும்.
ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சின்ன இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரே இடத்தில் உட்கார்ந்து படிக்காமல், சிறிது வீட்டைச் சுற்றி நடக்கலாம். வீட்டில் உள்ளவர்களுடன் சில நிமிடங்கள் உரையாடலாம்.
தேர்வு நேரங்களில் சரியான உணவு முறை வேண்டும். இரும்புச் சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள், கீரை, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். காலைச் சிற்றுண்டியை தவிர்த்தல்கூடாது. உடல் நலனைப் பேணுவதும் அவசியம் என்பதால் தேவையான உணவை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள்.
உடல் நலனைப்போலவே மனநலனும் மிகவும் அவசியம். பெற்றோரின் குணநலன்கள், வீட்டுச்சூழல், பொருளாதார நிலை போன்ற பல சவால்கள் இருக்கக்கூடும். இதனால் மாணவர்கள் எதிர்மறையான சிந்தனையை ஒருபோதும் அடைந்து விடக்கூடாது. நேரத்தை விரயமாக்கும் தேவையற்ற உரையாடல்களில் ஈடுபடுவதை தவிர்த்தல் நல்லது.
பாடங்களை அர்த்தம் புரியாமல் மனப்பாடம் செய்வதைவிட, புரிந்து படிக்க வேண்டும். சந்தேகம் ஏற்படும் பாடங்களை ஆசிரியரிடமோ அல்லது சக மாணவரிடமோ கேட்டு, தெளிவு பெற வேண்டும். படித்து முடித்தவுடன் பழைய தேர்வுத் தாள்களை வைத்து, பயிற்சி செய்யலாம். கணக்குப் பாடத்தை இயன்றவரை பலமுறை போட்டுப் பார்க்க வேண்டும்.
தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர், மாணவரை மட்டும் விட்டுவிட்டு, தனியாக கேளிக்கைகளில் ஈடுபடுதல், வெளியூர் பயணங்களை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இந்த டிப்ஸ் மாணவர்களுக்கு மட்டுமல்ல, மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்வில் வெற்றிபெற அனைவருக்கும் வாழ்த்துகள்.
0 Comments:
Post a Comment