சென்னையில் அமர் சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமானது, 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' என்ற திட்டத்துடன் இணைந்து 3 முதல் 18 வயதுக்கு உட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கும் சேர்ந்து ஒரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது.
இதனை அமர் சேவா சங்கத்துடன் இணைந்து செயல்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் தொடங்கி வைத்திருக்கிறோம். தரமான கல்வி-பெண் கல்வி-திறன் மேம்பாடு-விளையாட்டுக்கல்வி-உடல் கல்வி-ஆகியவற்றில் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியரை முழுமையாக ஈடுபடுத்தக்கூடியத் திட்டம் தான் இது.
இந்தியாவிலேயே நமது மாநிலம்தான் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியருக்கு ஏராளமான திட்டங்களைத் தீட்டி வருகிறது என்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். அந்த வகையில் இப்போது தொடங்கப்பட்டுள்ள திட்டம் மிகமிக ஒரு முன்னோடித் திட்டம்.
இரண்டாவது நிகழ்வாக, அமர் சேவா சங்கத்தின் நாற்பதாம் ஆண்டை முன்னிட்டு ஆண்டு மலர் வெளியிடும் நிகழ்ச்சி. மரியாதைக்குரிய ராம கிருஷ்ணன்-சங்கர் ராமன் ஆகியோரால் இன்று வளர்த்தெடுக்கப்பட்டு வரும் இந்த அமர் சேவா சங்கமானது 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று நாற்பது ஆண்டுகளைத் தொட்டுள்ளது. ஏழை எளிய மக்களின் நலனிற்காக குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை ஒளி பாய்ச்சிடும் ஒரு சிறந்த நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை மேம்படுத்தி அவர்களின் பொருளாதார நிலையில் சுய சார்புடன் இருப்பதற்குத் தேவையான திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலைவாய்ப்புக் கல்வி அளித்து வருகிறது. அவர்கள் நம்பிக்கையுடன் சமுதாய நீரோட்டத்தில் சமநிலை மற்றும் சம வாய்ப்புடன் இணைந்திடும் வகையில் செயல்புரிந்து வருகிறது.
அமர் சேவா சங்கமானது கிட்டத்தட்ட 900 கிராமங்களில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வு மேம்பட கிராமம் சார்ந்த மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. செயலி மூலம் குழந்தைகளுக்கான ஆரம்பகால குறைபாடுகளைக் கண்டறிந்து பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறீர்கள்.
இதுபோன்ற புதுமையான, ஆக்கப்பூர்வமான திட்டங்களோடு சுமார் 16,000 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டுப்பயிற்சி மற்றும் ஒருங்கிணைந்த கல்வியினை அளித்து நமது சமுதாயத்தில் அவர்களையும் ஒன்றிணைக்கும் வகையிலே ஆற்றல்மிகு செயல்புரிந்து வருவது மிகவும் பாராட்டுதலுக்குரியது. இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Click here to Join WhatsApp group for Daily kalvi news
0 Comments:
Post a Comment