இல்லம் தேடி கல்விக்கான மாவட்ட மற்றும் வட்டார அளவிலான ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை தமிழக பள்ளிக்கல்வித் துறை மறுசீரமைத்துள்ளது.
கொரோனா பொது முடக்க காலங்களில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி / இழப்புகளைக் குறைத்திடும் வகையில் "இல்லம் தேடிக் கல்வி"திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளி வளாகங்களுக்கு வெளியே உள்ள இல்லம் தேடி மையங்களில் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தும் விதமாக, மாநில, மாவட்ட, ஒன்றிய, பள்ளி அளவிலான நான்கு அடுக்கு குழுக்கள் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு குழுக்களுக்கும் தலைவர், உறுப்பினர் செயலர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுக்களும் தங்கள் அளவில் கொடுக்கப்பட்ட பிரத்தியோக பணிகளை செயல்படுத்தி வருகின்றன.
வட்டார அளவிலான குழுவில் இரண்டு ஆசிரியர்கள் இல்லம் தேடிக் கல்வி தொடர்பான வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு செயல்பாடுகளை கவனித்து வந்தனர். இந்த ஒருங்கிணைப்பு பணிகளை முழு நேரப் பணியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது . அதேபோன்று, மாவட்ட அளவிலும் ஆசிரியர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இல்லம் தேடி கல்விக்கான மாவட்ட மற்றும் வட்டார அளவிலான ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை தமிழக பள்ளிக்கல்வித் துறை மறு சீரமைத்துள்ளது. அதன்படி, மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் , ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவெடுத்துள்ளது.
இதுதொடர்பாக, தூத்துக்குடி, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அனைத்து மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு எழுதிய கடிதத்தில், " தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் வாயிலாக மாதந்தோறும் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். இம்முறை சென்னை மண்டலத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் ( 15.07.2022 ) இல்லம் தேடி கல்விக்கான மாவட்ட மற்றும் வட்டார அளவில் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு செயல்படவேண்டும் என்று முடிவெடிக்கப்பட்டது.
அதன்படி மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் , ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் இல்லம் தேடி கல்வி மையங்களில் சிறப்பாக செயல்படவும் , ஏனைய மீதமுள்ள ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மீளவும் பள்ளி பணியில் ஈடுபடவும்" என்று தெரிவிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment