அரசு மாதிரி பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை!

அரசு நடத்தி வரும் மாதிரிப் பள்ளிகளில், மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.



தமிழகத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன் 32 மாவட்டங்களில் அரசு மாதிரிப் பள்ளிகளை நடத்தி வருகிறது. மேலும், கூடுதல் வசதிகளுடன் 25 மாதிரிப் பள்ளிகளை 150 கோடி ரூபாய் செலவில் துவங்கவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

ஏற்கனவே சோதனை முறையில் சென்னையில் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் நன்கு பயிலக் கூடிய மாணவர்களை தேர்ந்தெடுத்து போட்டித் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகளுக்கு உண்டு உறைவிட வசதியுடன் சிறப்பு பயிற்சியும் தமிழக பள்ளிக் கல்வித் துறையால் அளிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் அரசு நடத்திவரும் மாதிரிப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 


பத்தாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர் ஒன்பதாம் வகுப்பில் தேசிய அளவில் நடத்தப்படுகின்ற 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு எனப்படும் TRUST தேர்வு மதிப்பெண்களையும், 9ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழித் திறன் தேர்வு எனப்படும் NMMS தேர்வில் பெற்ற மதிப்பெண்களையும், 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான NTSE தேர்வு மதிப்பெண் மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு மாணவர்கள் மெரிட் அடிப்படையில் சேர்க்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் நன்கு பயிலக்கூடிய மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதலே சிறப்பு கவனம் செலுத்துவது மற்றும் சிறப்பு பயிற்சி அளிப்பது போன்றவற்றின் மூலமாக தேசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் உயர் கல்வி படிப்பதை வழிவகை செய்வதற்கு இந்த நடைமுறையை பின்பற்றி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 Comments:

Post a Comment