9-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் வரும் கல்வியாண்டு முதல் நிறுத்தம்: பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

9-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் நிறுத்தப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய கல்வித்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடத்தை பள்ளிக்கல்வித் துறை 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

இத்திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 670 பள்ளிகள் தேர்வாகின. அதில் முதல்கட்டமாக 67 பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் தந்தது. ஒவ்வொரு பள்ளிகளிலும் தலா 70 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதி மற்றும் சமூகநலத் தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் விவசாயம், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ், சுற்றுலா, அழகு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த தொழிற்கல்வி பாடம் 2019-ம் ஆண்டு 184 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் 29,456 மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர்.


இந்நிலையில் வரும் கல்வியாண்டு (2022-23) முதல் 9, 10-ம் வகுப்பில் தொழிற்கல்வி நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது; உயர்நிலை வகுப்புகளில் உள்ள தொழிற்கல்வி பாடத்தை நிறுத்துவதற்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 2022-23-ம் கல்வியாண்டு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் இடம்பெறாது. 9-ம் வகுப்பு முடித்து, 10-ம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும்.

அதற்கேற்ப 184 பள்ளிகளில் உள்ள தொழிற்பயிற்சி ஆய்வகங்களின் உபகரணங்களை தலைமை ஆசிரியர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டுமென பயிற்றுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வழக்கம்போல் 11, 12-ம் வகுப்புகளில் மட்டுமே மாணவர்கள் தொழிற்கல்வி பாடங்களை படிப்பார்கள் என்றனர்.

9-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் நிறுத்தப்படுவதால், 150-க்கும் அதிகமான தற்காலிக பயிற்றுநர்கள் பணியை இழக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


0 Comments:

Post a Comment