ஆசிரியர் - மாணவர் உறவு மேம்பட பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.

கோடை விடுமுறையில், மலை சுற்றுலா தலங்களில் சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்துவது உட்பட, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

* மாதந்தோறும் பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் சந்திப்பு, பள்ளி மேலாண்மை குழுவின் உறுதுணையுடன் நடத்தப்படும்

* இலக்கியம், கவின்கலை, சூழலியல் சார்ந்த மன்றங்கள், பள்ளிகளில் புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்த வழிவகை செய்யப்படும்

* விளையாட்டு, நுண்கலை, இலக்கியம் என, மாணவர்களின் ஆர்வத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்

* கலைத் திருவிழாக்களும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும். இவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள், கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்

* மாணவர்களின் தனித் திறமைகளை மெருகேற்ற, மலை சுற்றுலா தலங்களில், கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். சூழலியல், தலைமைத்துவம், மனித உரிமை, சமூக நீதி, பெண்ணியம் மற்றும் எதிர்காலவியல் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படும்

* வரும் கல்வியாண்டின் முதல் வாரத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, மன நலம், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்தல், போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்

* செயல்வழிக் கற்றலை ஊக்குவிக்க, பள்ளிதோறும் காய்கறி தோட்டங்கள் ஏற்படுத்தப்படும். அவற்றில் விளையும் காய்கறிகள், பழங்கள், கீரைகள், சத்துணவில் பயன்படுத்தப்படும்

* மாநில சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்கள் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துரையாட, ஏற்பாடுகள் செய்யப்படும்

* அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களுக்காக, 'ஸ்டெம்' எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த, புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

* தேவைப்படும் மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கப்படும்

* மாணவர்களின் நல்லியல்புகளை மேம்படுத்தவும், நற்பண்புகளை உருவாக்கவும், பெற்றோரும், பள்ளியும், அரசும் இணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. அத்தகைய இணைப்பை உறுதிப்படுத்த, தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.

0 Comments:

Post a Comment