மாணவர் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும் முன்னெடுப்புகள் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் குறித்து செய்தி வெளியீடு!
சிறந்த கல்வி என்பது வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமல்ல வாழ்க்கைக் கல்வியும் கூட ! அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் , மாணவர் நலன் , மகிழ்ச்சியான கற்றல் சூழல் , ஆசிரிய- மாணவ நல்லுறவு மேம்பட தமிழ்நாடு அரசு , நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது . கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் கற்றல் கற்பித்தல் , உடல் - மன நலனில் ஏற்பட்ட இடைவெளி காரணமாக , பள்ளிகள் திறக்கப்பட்டபின்னரும் ஆசிரியர்கள் கூடுதல் பொறுப்போடு மாணவர்களை கவனித்து அரவணைத்து சிறந்த வகுப்பறைச் சூழலை உருவாக்கி வருகின்றனர் . ஆசிரியர் தமது கற்பித்தல் பணியுடன் மாணவர்களின் மனநலம் மேம்பட அவர்களோடு தொடர்ந்து உரையாடுவதில் உள்ள சிரமங்களையும் அரசு உணர்ந்திருக்கிறது . இந்தச் சிக்கல்களைக் களையும்வண்ணம் அரசு பின்வரும் நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளது.
மாணவர் குறித்து பெற்றோருடைய கருத்தையும் ஆசிரியரின் கருத்தையும் இரு தரப்பும் உணர்ந்து கொள்ள ஏதுவாக , மாதந்தோறும் பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் சந்திப்பு பள்ளி மேலாண்மைக் குழுவின் உறுதுணையுடன் நடத்தப்படும் . கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இடைவெளியால் செயல்படாமல் இருக்கும் இலக்கியம் , கவின்கலை , சூழலியல் சார்ந்த மன்றங்கள் பள்ளிகளில் புதுப்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்த வழிவகை செய்யப்படும் . மாணவர்களின் பல்வேறு திறன்களை ஊக்குவிக்க பாடத்திட்டம் மட்டுமல்லாது , விளையாட்டு , நுண்கலை , இலக்கியம் என ஒவ்வொரு மாணவரின் ஆர்வத்திற்கும் முக்கியத்துவம் அளித்து , அவர்தம் முழுத்திறனும் சிறப்பான முறையில் வெளிப்பட ஏதுவாக கலைத் திருவிழாக்கள் பள்ளி , வட்டார , மாவட்ட , மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும் . இசை , நாடகம் , கவிதை , கதை சொல்லல் , பொம்மலாட்டம் , நாட்டுப்புறக் கலைகள் , ஓவியம் , கூத்து , புகைப்படக் கலை , நடனம் போன்ற பல திறன்களை வெளிப்படுத்தும் வண்ணம் கலைத் திருவிழாக்களும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும்.
கலை விளையாட்டுத் திறன்களிலும் மன்றச் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும் இந்திய அளவிலும் மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் . மாணவர்களின் தனித் திறமைகளை மெருகேற்ற கோடை விடுமுறையில் மலை சுற்றுலாத் தளங்களில் கோடைக் கொண்டாட்ட சிறப்புப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும் பள்ளிப் பாடங்கள் தவிர , சூழலியல் , தலைமைத்துவம் , மனித உரிமை , சமூக நீதி , பெண்ணியம் மற்றும் எதிர்காலவியல் போன்ற பொருண்மைகளில் பயிற்சிகள் அளிக்கப்படும்
மாணவர்களுக்கு தொழில்நுட்பத்திலும் கணினியிலும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கணினி நிரல் மன்றங்களும் எந்திரனியல் மன்றங்களும் ஏற்படுத்தப்படும் .
மேலும் இணையப் பாதுகாப்பு மற்றும் Ethical Hacking இல் பயிற்சி அளிக்கப்பட்டு மாநில அளவிலான ஹேக்கத்தான் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும் . வரும் கல்வியாண்டின் முதல் வாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மனநலம் குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுத்தல் , போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுத்தல் , தன்சுத்தம் பேணுதல் போன்றவற்றில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் .
மாணவர்கள் நல்ல உடல்நலத்தோடு இருந்தால் மட்டுமே கல்வியில் கவனம் செலுத்த முடியும் என்பதால் உடலியக்க நிபுணர்கள் ( Physio theraphists ) வாயிலாக சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கப்படும் . செயல்வழிக்கற்றலை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிதோறும் காய்கறித் தோட்டங்கள் மாணவர்களைக் கொண்டு ஏற்படுத்தப்படும் அவற்றில் விளையும் காய்கறிகள் . பழங்கள் , கீரைகள் பள்ளியின் சத்துணவில் பயன்படுத்தப்படும்.
மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடுகள் செய்யப்படும் . மாணவர்களிடம் தலைமைப்பண்பு , நல்லொழுக்கம் மற்றும் தன்னம்பிக்கை சார்ந்த விழுமியங்களை வளர்க்க மண்டல மாநில அளவில் சாரண சாரணியர் முகாம்கள் நடத்தப்படும் . மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவித்து அவர்தம் படைப்புத் திறனை வெளிக்கொணரும் வகையில் மாணவர்களுக்கென பல்வேறு இதழ்கள் வெளிவரவிருக்கின்றன.
3 - 5 வகுப்பு மாணவர்களுக்கு ' ஊஞ்சல் ' என்கிற இதழும் .6-9 மாணவர்களுக்கு ' தேன் சிட்டு ' என்கிற இதழும் வெளிவரவிருக்கின்றன . மேலும் , ஆசிரியர்களுக்கென நாட்டிலேயே முதல்முறையாக ‘ கனவு ஆசிரியர் ' என்கிற இதழும் வெளிவரவிருக்கிறது . மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் படைப்புத் திறனை வெளிப்படுத்தும் வண்ணம் இவ்விதழ்களுக்கு தங்கள் ஆக்கங்களை அனுப்பலாம்.
அன்றாட நிகழ்வுகளிலும் நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களிலும் உள்ள அறிவியலை அறிந்துகொள்ள வழிசெய்யும் வகையில் ' எங்கும் அறிவியல் யாவும் கணிதம் ' என்கிற புரிதலோடு அறிவியல் ஆர்வமுள்ள மாணவர்களுக்கென STEM எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த புதிய திட்டமும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது . நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள் உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதுடன் மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும் .
மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியரின் பரிந்துரையின் பேரில் நிபுணர்களைக் கொண்டு மனநல ஆலோசனை வழங்கப்படும் . மாணவர்களின் நல்லியல்புகளை மேம்படுத்தவும் நற்பண்புகளை உருவாக்கவும் பெற்றோரும் பள்ளிக்கூடமும் அரசும் இணைந்து அரசும் இணைந்து செயல்படவேண்டிய தேவை இருக்கிறது . அத்தகைய இணைப்பை உறுதிப்படுத்துவதற்கான செயல்பாடுகள் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறையால் மேற்கொள்ளப்படும்.
0 Comments:
Post a Comment