தமிழ்நாட்டில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறப்பு..




தமிழ்நாட்டில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி இறுதித் தேர்வு முடிந்து 14ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

எனினும், பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதம் ஆகலாம் என தகவல் வெளியானது.

இந்நிலையில், 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். எந்த மாநிலத்திலும் இல்லா வகையில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாள்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர்  கூறினார்.

இது தவிர வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகளையும் அமைச்சர் வெளியிட்டார். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ல் தொடங்கப்படும் என்றும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ல் தொடங்கும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3ல் தொடங்கும் என்று கூறி உள்ளார்.



0 Comments:

Post a Comment