கே.வி., பள்ளி மாணவர் சேர்க்கை; புதிய வழிகாட்டுதல் வெளியீடு

நாடு முழுதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில் எம்.பி.,க்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசு, மாணவர் சேர்க்கைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.நாடு முழுதும் உள்ள, 1,200 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை மத்திய அரசு நிர்வகித்து வருகிறது.

இதில், 14.35 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு ஆண்டுதோறும் தலா 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தன. நேரடி வாரிசுகள்இதன் அடிப்படையில் லோக்சபாவை சேர்ந்த 543 எம்.பி.,க்கள், ராஜ்யசபாவை சேர்ந்த 245 எம்.பி.,க்கள் பரிந்துரைக்கும் 7,880 மாணவ - மாணவியருக்கு இந்த பள்ளிகளில் ஆண்டுதோறும், 'சீட்' வழங்கப்பட்டு வந்தது.

இந்த ஒதுக்கீட்டை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது.மத்திய அமைச்சர்கள், மத்திய கல்வித்துறை ஊழியர்களின் குழந்தைகள், எம்.பி.,க்களின் நேரடி வாரிசுகள் மற்றும் பேரக்குழந்தைகள், கே.வி., பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களின் பேரக்குழந்தைகள், பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த ஓதுக்கீடுகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை கே.வி., பள்ளிகளுக்கான அமைப்பு வெளியிட்டு உள்ளது. அதன் விபரம்:கொரோனா தொற்று பாதிப்பினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, பி.எம்., கேர்ஸ் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு அளிக்கப்படும். மாவட்ட கலெக்டர்கள் அளிக்கும் பரிந்துரைப் பட்டியலின் அடிப்படையில் இந்த மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

இந்த பரிந்துரையின் கீழ், ஒவ்வொரு கே.வி., பள்ளியிலும் 10 மாணவர் வரை சேர்த்துக் கொள்ளப்படுவர். 2022 - 23ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஒதுக்கீடு ஜூன் மாதம் வரை வழங்கப்படும்.பரம் வீர் சக்கரா, மகா வீர் சக்கரா, வீர் சக்கரா, அசோக் சக்கரா, கீர்த்தி சக்கரா, ஷவுரிய சக்கரா உள்ளிட்ட வீர தீர செயல்களுக்கான விருது பெற்றோரின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீடு தொடரும்.ஒதுக்கீடு தொடரும்'ரா' எனப்படும் உளவு அமைப்பை சேர்ந்த ஊழியர்களின் குழந்தைகள் 15 பேருக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீடு தொடரும்.

அதே போல, பணியின் போது இறந்த மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள், மற்றும் நுண் கலைகளில் சிறப்பு திறமை உள்ள பிள்ளைகளுக்கும் ஒதுக்கீடு தொடரும்.வெளிநாடுகளில் இருந்து பணியிட மாறுதல் பெற்று வருபவர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 60 இடங்கள் ஒதுக்கப்படும். இதற்கான மாணவர் சேர்க்கை நவம்பர் மாதம் வரை நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


0 Comments:

Post a Comment