புதிய கல்வி கொள்கைப்படி பொது தேர்வில் மாற்றம்

புதிய கல்வி கொள்கைப்படி, திறன் வளர்ப்புக்கான கூடுதல் தொழிற்கல்வி பாடங்கள், பள்ளி பொதுத் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் அம்சங்களை, அனைத்து மாநிலங்களும் அமல்படுத்துமாறு, மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது. இதற்காக, மத்திய அரசு சார்பில் நிதியுதவியும் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், கூடுதலாக திறன் வளர்ப்பு தொழிற்கல்வி பாடத்துக்கான, தேர்வு தேதிகள் தனியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை, பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே, தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு முதல், மற்ற பாடப்பிரிவு மாணவர்களுக்கும் கூடுதலாக, தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல், 10ம் வகுப்புக்கு இதுவரை தொழிற்கல்வி பாடமும், அதற்கான தேர்வும் கிடையாது. பிற மாநிலத்தவருக்கான விருப்ப மொழி பாடம் மட்டுமே கூடுதலாக இடம்பெறும். இந்த ஆண்டு முதல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்ப மொழி பாடம் மட்டுமின்றி, கூடுதலாக தொழிற்கல்வி பாடத்துக்கும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 10ம் வகுப்புக்கு மே 21; பிளஸ் 2க்கு மே 28ம் தேதி, திறன் வளர்ப்பு தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.புதிய கல்வி கொள்கையில் அறிவுறுத்தப்பட்டு உள்ள தொழிற்கல்வி பாடங்கள், மத்திய அரசின் சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில், இந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டுள்ளன.

'தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மாட்டோம்' என அரசு அறிவித்தாலும், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், அதன் அம்சங்கள் படிப்படியாக அமலுக்கு வர துவங்கி உள்ளன.

0 Comments:

Post a Comment