மகளிருக்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் முழுமையாக நிரம்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் 2022-23ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதனையடுத்து இன்று காலை 10 மணியிலிருந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
கேள்வி நேரத்தின்போது மண்ணச்சநல்லூர் உறுப்பினர் கதிரவனுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் பொன்முடி, முதலமைச்சர் மகளிர் கல்விக்காக மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளதாகவும், எந்தக் கல்லூரியில் மாணவியர் சேர்ந்தாலும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளதைக் குறிப்பிட்டார்.
ஆனால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பெண்கள் அவ்வளவாக சேருவதில்லை எனவும், இந்த எண்ணிக்கையை உயர்த்தவே உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் இதன்மூலம் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலியாக உள்ள பெண்கள் இடங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் முழுமையாக நிரம்பும் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், உயர் கல்வித்துறைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சாதனைகள் பல, அதில் அரசின் சார்பாக 10 கலை, அறிவியல் கல்லூரிகளும், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக 10 கலைக் கல்லூரிகளும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 1 கலைக் கல்லூரியும் என்று மொத்தம் 21 கலைக் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment