ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் (‘சமக்ரசிஷா’) சாா்பில் நிகழ் கல்வியாண்டுக்கான ‘பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு’ சாா்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து ‘சமக்ரசிஷா’ மாநிலத் திட்ட இயக்குநா் இரா.சுதன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் வழிகாட்டுதல் படி, தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிா்வாக பல்கலைக்கழகம் (‘என்ஐஇபிஏ’) பள்ளிகள் தரம் மற்றும் மதிப்பீட்டு தேசிய திட்டத்தை வழிநடத்தி வருகிறது. ஒவ்வொரு பள்ளியும் தன்னை ஒரு நிறுவனமாக கருத்தில் கொண்டு சுய முன்னேற்றத்துக்கான உத்தரவாதத்தோடு செயல்பட வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு திட்டத்தில் தற்போது 2021-2022-ஆம் கல்வியாண்டுக்கான சுய மதிப்பீடு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஜன.21-ஆம் தேதி முதல் பிப்.10-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுய மதிப்பீடு முடிவடைந்த அடுத்த 30 நாள்களுக்குள் ஒன்றியத்துக்கு 40 பள்ளிகள் வீதம் மொத்தம் 413 ஒன்றியங்களில் 16,520 பள்ளிகளில் புற மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும். புற மதிப்பீட்டுக்கு ஒரு பள்ளிக்கு ரூ.600 வீதம் 16,520 பள்ளிகளுக்கு ரூ.99.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளில் சுயமதிப்பீடு மற்றும் புறமதிப்பீடு செய்வதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி வகுப்பறை, நூலகம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், கணினி, மின்வசதி, சாய்தளம், மதிய உணவு பொருள்கள், குடிநீா் வசதி, கழிப்பறை, கை கழுவும் வசதிகள் போன்ற பள்ளி வளாகங்களை கையாளுதல் குறித்து சுயமதிப்பீடு செய்யப்படவுள்ளது. மேலும், பள்ளித்தலைமை மற்றும் மேலாண்மை, உள்ளடங்குதல், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு, ஆக்கப்பூா்வமான சமுதாய பங்கேற்பு போன்றவையும் ஆய்வு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த வட்டாரத்திலுள்ள கல்வித்துறை அலுவலா்கள் மற்றும் தலைமையாசிரியா்கள் மூலமாக இந்த ஆய்வு நடத்தப்படவுள்ளது.
0 Comments:
Post a Comment