ஊரக திறனாய்வு தேர்வுக்கு 9ம் வகுப்பு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்து அரசு தேர்வுகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வுத் தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகள் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த தேர்வு எழுத ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத தகுதி உடையவர் ஆவர். அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் கடந்த டிசம்பர் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா, சென்னையை நீங்கலாக அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊரகத் திறனாய்வு தேர்வு 30ம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது பல பள்ளிகளிலிருந்து தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் தேவை என்று தகவல் பெறப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்களின் நலன் கருதி விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து வழங்குதல் மற்றும் பதிவேற்றம் செய்தல் குறித்த விவரங்களை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கால அவகாச நீட்டிப்பினைத் தொடர்ந்து வரும் 30ம் தேதி நடக்க இருந்த ஊரகத் திறனாய்வு தேர்வு அடுத்த மாதம்(பிப்ரவரி) 20ம் தேதி நடக்கும்.
இந்த விவரங்களை தலைமை ஆசிரியர்கள் ஏற்கனவே இந்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கும், தற்போது விண்ணப்பிக்க உள்ள மாணவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.
எனவே தகுதி வாய்ந்த தேர்வர்களின் விண்ணப்பங்களை வரவேற்று, ஆய்வு செய்து பதிவேற்றம் செய்ய உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விண்ணப்பங்களை வரும் 12ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment