15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்-சிறுமிகளுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி...!

இந்தியாவில் நாளை முதல் 15-18 வயது சிறுவர்-சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது
இந்தியாவில் நாளை முதல் 15-18 வயது சிறுவர்-சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. இதற்கான பதிவு தொடங்கி உள்ளது.



இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. பல கட்டங்களாக செயல்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டத்தில் தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 24-ந்தேதி முதன்முதலாக தென்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் உலகமெங்கும் பரவத்தொடங்கியது.

இந்தியாவையும் இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை. இதையடுத்து இதுவரை தடுப்பூசி திட்டத்தின்கீழ் வராத குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும், இதேபோன்று மற்ற பெரியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் பண்டிகையன்று திடீரென டி.வி.யில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர், “கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3-ந்தேதி முதல் தொடங்க உள்ளது.

இதேபோல் ஜனவரி 10-ந்தேதி முதல் முன் எச்சரிக்கை தடுப்பூசி (பூஸ்டர்) செலுத்தும் பணி தொடங்கும். முதல்கட்டமாக மருத்துவப்பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி (முன் எச்சரிக்கை தடுப்பூசி) செலுத்தப்படும்” என அறிவித்தார்.

இதன்படி நாளை (3-ந்தேதி) 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.

இதற்காக பதிவு செய்வது புத்தாண்டு தினமான நேற்று தொடங்கி உள்ளது. இதுபற்றி மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர், “புத்தாண்டையொட்டி, 15-18 வயது வரையிலானவர்களுக்கு கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கு கோவின் தளத்தில் பதிவு செய்வது இன்று தொடங்கி உள்ளது. தகுதி வாய்ந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு குடும்ப உறுப்பினர்கள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

15-18 வயதினருக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசி செலுத்தி 30 நிமிடம் கண்காணிப்பில் வைத்த பின்னரே அனுப்பி வைப்பார்கள். 28 நாட்களுக்கு பிறகு 2-வது டோஸ் செலுத்தப்படும்.

இவர்களுக்கென தனியாக தடுப்பூசி மையங்கள் உருவாக்கப்படுகின்றன. மற்ற வயதினருக்கு தடுப்பூசி போடுகிறபோது, குழப்பம் நேரிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு என கூறப்படுகிறது.

இணையதள வசதி கொண்டுள்ள கம்ப்யூட்டர்களில் கோவின் தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

செல்போனில் பதிவு செய்ய விரும்புவோர் அனைத்து ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள்போன்களில் உள்ள பிளேஸ்டோரில் கோவின் செயலியை பதிவிறக்கம் செய்து அதன்மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

ஆதார் அட்டை, பள்ளி அடையாள அட்டை, 10-ம் வகுப்பு சான்றிதழ் ஆகியவற்றை அடையாள ஆவணங்களாக பயன்படுத்தலாம்.

0 Comments:

Post a Comment