கல்வித் தொலைக்காட்சி, செல்போன் செயலிகள் வழியாக 10, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு கற்றல்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல்காரணமாக 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜன.31 வரை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12-ம் வகுப்புமாணவர்கள் இந்த விடுமுறை காலத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியிருந்தார்
அதற்கேற்ப, அந்தந்த மாவட்டமுதன்மை கல்வி அலுவலகங்கள் வாயிலாக 10. 12-ம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
தனியார் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் இணைய வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, அரசுப் பள்ளிகளில் பயில்பவர்களுக்கும் கல்வித் தொலைக்காட்சி, செல்போன் செயலிகள் மூலமாக கற்றல்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி துரிதமாக பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும். அதன் பிறகு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகதளங்கள் வழியாக வாரம்தோறும் பாட வாரியாக குறுந்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். குறுந்தேர்வில் மாணவர்கள் குறைவாக மதிப்பெண் பெறும் பகுதிகளை கண்டறிந்து ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment