ஆசிரியர் பணி நியமன வயது வரம்பு அதிகரிப்பு - பள்ளி கல்வித் துறை.!

 ஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது வரம்பை அதிகரிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, அடுத்தவாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக பள்ளி கல்வித்துறையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் நியமனத்திற்கான வயது வரம்பு 57 ஆக இருந்தது. ஓய்வு வயது 58 ஆக இருந்த நிலையில், அதற்கு ஓராண்டு முன் வரை நியமனம் செய்யலாம் என்ற அரசாணை பின்பற்றப்பட்டு வந்தது.இந்நிலையில், தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 59 வயது வரை பணி நியமனம் மேற்கொள்ளலாம் என்று பட்டதாரிகள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அதற்கு நேர்மாறாக ஆசிரியர்களின் வயது வரம்பை 40 ஆக தளர்த்தி, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. அரசு பள்ளிகளில் 2,207 முதுநிலை ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வு, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் தான், இந்த வயது வரம்பு அமலுக்கு வந்துள்ளது. இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பல ஆண்டுகளாக அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், தற்போது அதற்கான நடவடிக்கை துவங்கியுள்ளது. இதற்காக, பல ஆண்டுகளாக படித்து பட்டங்கள் பெற்று, பயிற்சி பெற்று வந்தவர்களுக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளதாக, பட்டதாரிகள் தெரிவித்து உள்ளனர்.இதுதொடர்பாக, பட்டதாரிகள் தரப்பில், சென்னையில் பல்வேறு கட்ட போராட்டங்களும் நடந்தன.இந்நிலையில், ஆசிரியர்களின் நியமன வயது வரம்பை உயர்த்துவது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.இதுகுறித்து, அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தி, முதல்வருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக, ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வயது வரம்பு அதிகரிக்கப்பட்டால், முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 1 முதல் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள்.!

 தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . கொரோனோ வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக 19 மாதங்களுக்கு மேல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்பு திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக கல்வியாளர்களும் மனோதத்துவ நிபுணர்களும் தெரிவித்து வந்தனர். மேலும் மாணவர்களின் கற்றல் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகளின் முடிவுகள் வெளியாகின.


இந்தநிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1.11.2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும் எனவும் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் தொடக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

எனவே , தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளில் முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். பள்ளித் தூய்மை, புதர்கள் மற்றும் குப்பைகளின்றி காண்பதற்கு அழகாகவும் ,தூய்மையாகவும் இருக்கும் வகையில் பள்ளி வளாகம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் .

பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள் , தலைமை ஆசிரியர் அறை , சமையலறை மற்றும் கழிப்பறைகள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும் . வகுப்பறை மற்றும் தலைமை ஆசிரியர் அறையில் உள்ள தளவாட பொருட்கள் , கதவு மற்றும் ஜன்னல்கள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் . பள்ளியின் அனைத்து இடங்களும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் .

பள்ளிக் கட்டிடத்தின் மேற்பரப்பில் குப்பைகள் இல்லாமலும் , மழை நீர் வடிந்து ஓடுவதற்கான பாதை , மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக சீர்செய்யப்பட்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும் .என தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது அந்த வகையில் வருகின்ற 27ஆம் தேதிக்குள் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்